Election bannerElection banner
Published:Updated:

திருவள்ளூர்: கிரிக்கெட் மட்டையில் தட்டுப்பட்ட மர்மப் பொருள்!-பதற்றத்தை ஏற்படுத்திய ராக்கெட் லாஞ்சர்

கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்
கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையம் அருகே விளையாட்டு மைதானத்தில் கண்டெடுக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்கு முந்தைய ராக்கெட் லாஞ்சரால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் அரசு மருத்துவமனைக்கு அருகேயுள்ள மைதானத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் மட்டையில் பட்டு பந்து, மைதானத்தின் மூலையிலுள்ள புதரில் விழுந்திருக்கிறது. பந்தைத் தேடி இளைஞர்கள் புதரில் ஆராய்ந்தபோது அவர்களின் கிரிக்கெட் மட்டையில் இரும்புப் பொருள் ஒன்று தட்டுப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிப் பார்த்தனர். அப்போது துருப்பிடித்த மர்ம இரும்புப் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

மைதானம்
மைதானம்

பார்ப்பதற்கு வெடிகுண்டுபோல் இருந்ததால், பயந்துபோன இளைஞர்கள் ஓடிச் சென்று உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். நேரில் வந்து பார்த்த கிராம அதிகாரி மர்ம இரும்புப் பொருள் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்துக்குத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, விளையாட்டு மைதானத்துக்கு ஊத்துக்கோட்டை காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் தரணீஸ்வரி, துணை ஆய்வாளர் நரசிம்மன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விரைந்து வந்து மர்மப் பொருளை சோதனை செய்தனர். அப்போது கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருள் வெடிகுண்டு என்பதை உறுதி செய்த காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மைதானத்தில் குழுமியிருந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு வெடிகுண்டை பத்திரமாக மீட்டு வெளியே எடுத்தனர். அவர்கள் சோதித்ததில் வெடிகுண்டு ராக்கெட் லாஞ்சர் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும், இரும்பால் தயாரிக்கப்பட்டு துருப்பிடித்திருக்கும் ராக்கெட் லாஞ்சர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து லாஞ்சரைக் கைப்பற்றிய நிபுணர்கள் மணல் நிரப்பப்பட்ட வாளியில் வைத்து கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள ராணுவத் தளவாடப் பொருள்கள் அழிக்கும் நிறுவனத்துக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்
கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள இரும்பு உருக்காலைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 1,628 வெடிகுண்டுகள் கடந்த 20-ம் தேதி அன்று ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாகச் செயலிழக்கவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு