Published:Updated:

`நூறாண்டுகளில் நாங்கள் சந்திக்காத துயரம் இது!' - மன்னார்குடியில் சிக்கித் தவிக்கும் பாம்பே சர்க்கஸ்

சர்க்கஸ் குழு
News
சர்க்கஸ் குழு

உயிரை துச்சம் என நினைத்து சாகசம் செய்தவர்கள் இன்று கூண்டுக்குள் அடைப்பட்டுக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். உடனடியாக எங்களுக்கு வேண்டிய உதவிகளையும், நிவாரணத்தையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து தர வேண்டும்.

மன்னார்குடியில் முகாமிட்டுக் காட்சிகளை நடத்தி வந்த சர்க்கஸ் குழு ஒன்று கொரோனா ஊரடங்கால் வருமானமின்றித் தவித்து வருகின்றது. பொன்விழா ஆண்டைக் கொண்டாட வேண்டிய சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த கலைஞர்களும் விலங்குகளும் துயரத்தில் உள்ளன. `எங்களை சொந்த ஊருக்கு அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கண்ணீர் வடிக்கின்றனர் கலைஞர்கள்.

சர்க்கஸ் குழுவினர்
சர்க்கஸ் குழுவினர்

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்த பாம்பே சர்க்கஸ் குழுவினர் புகழ்பெற்ற பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சர்க்கஸ் காட்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தடபுடலாகக் காட்சிகளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் சர்க்கஸ் காட்சிகளைக் காண்பதற்கு சுமாரான கூட்டமே வந்தன. இதையடுத்து மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து செய்த சாகசங்கள் செய்வதைக் கேள்விப்பட்டு கூட்டம் வரத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து கொரோனா பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக திரையரங்கம் உள்ளிட்டவை மூடப்பட்ட போது சர்க்கஸ் காட்சிகளும் ரத்துசெய்யப்பட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டுள்ள சர்க்கஸ் குழு, இதனால் வருமானத்தை இழந்து தவித்து வருகிறது. அதே போல் ஒட்டகம் உள்ளிட்ட விலங்களுக்கும் உணவு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஏற்கெனவே அழியும் நிலையில் உள்ள சர்க்கஸ் கலை தற்போதுள்ள ஊரடங்கால் பெரும் துயரத்தில் சிக்கியுள்ளதாகவும், நூற்றாண்டில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இல்லை என்றும் தாயுள்ளத்துடன் எங்களை மீட்டு கரை சேர்ப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் கூறி வருகின்றனர்.

சர்க்கஸ்
சர்க்கஸ்

இது குறித்து பாம்பே சர்கஸ் குழுவின் மேனேஜரான ரமேஷ் என்பவரிடம் பேசினோம். `` 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்களது பாம்பே சர்க்கஸ் குழுவிற்கு இது நூற்றாண்டுக் காலம். நூற்றாண்டைக் கொண்டாட வேண்டிய தருணத்தில் பெரும் துயரத்தில் சிக்கி தவிக்கிறது எங்களுடைய சர்க்கஸ் குழு. தமிழ்நாடு, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த 134 ஆண் மற்றும் பெண் கலைஞர்களுடன், ஒட்டகம், குதிரை, நாய்கள், கோழிகள், கிளிகள் என 50-க்கும் மேற்பட்ட விலங்குகளையும் கொண்ட சர்க்கஸ் குழு. நாங்கள் பிப்ரவரி மாதம் இறுதியில் மன்னார்குடியில் காட்சிகளைத் தொடங்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாம் நல்லா போய்கிட்டு இருந்த நேரத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டிய பேரிடியான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கையிலிருந்த பணம் சில நாள்களைக் கடத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. சர்க்கஸ் நிகழ்ச்சிக்காகப் போடப்பட்ட டென்ட் கொட்டாயில் முடங்கிப் போனது எங்கள் வாழ்க்கை. எங்களின் நிலையை அறிந்த உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உடனே வந்து அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களைத் தந்து உதவினார். இதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் பலர் தாமாக முன்வந்து எங்களுக்காக நேசக்கரம் நீட்டினர்.

உதவிய அமைச்சர் ஆர்.காமராஜ்
உதவிய அமைச்சர் ஆர்.காமராஜ்

வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழக மக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதைத் தங்கள் அன்பினால் பல்வேறு உதவிகளைச் செய்ததன் மூலம் உணர வைத்த நாள்கள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காட்சிகள் நிறுத்தபட்டு 25 நாள்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்று வரை அடுப்பு நிற்காமல் எரிகிறது என்றால் ஈர மனம் படைத்த தமிழகம்தான் காரணம்.

வந்தாரை வாழ வைப்பவர்கள் தமிழக மக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதைத் தங்கள் அன்பினால் பல்வேறு உதவிகளைச் செய்ததன் மூலம் உணர வைத்த நாள்கள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாம்பே சர்க்கஸ் மேலாளர்

மூன்று வேளை வயிராற சாப்பிடுவதற்கு இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாத அளவுக்குப் பொருளாதார உதவி கிடைக்கிறது. ஆனால் டென்ட் கொட்டாயில் இருப்பதால் மின்சாரத்திற்காக ஜெனரேட்டர் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு டீசலுக்கு மட்டுமே ரூ.5,000 செலவாகிறது. அத்துடன் ஊழியர்கள் மற்றும் விலங்குகளுக்குப் பெரும் தொகை செலவாகிறது. கிட்டத்தட்ட ரூ.25,000 இருந்தால்தான் ஒரு பொழுது எங்களுக்கு விடியும் என்கிற நிலையில் இருக்கிறோம். மேலும் எங்கள் வருமானத்தை நம்பிக் குடும்பங்கள் பசியாலும், பட்டினியாலும் சொந்த ஊரில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒட்டகம்
ஒட்டகம்

உயிரை துச்சம் என நினைத்து சாகசம் செய்தவர்கள் இன்று கூண்டுக்குள் அடைப்பட்டுக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். உடனடியாக எங்களுக்கு வேண்டிய உதவிகளையும், நிவாரணத்தையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து தர வேண்டும். அத்துடன் எங்களுக்காகக் கண்ணீரும் கம்பலையுமாக நூற்றுக்கணக்கான கலைஞர்களின் குடும்பத்தினர் வழி மேல் விழி வைத்துத் தவித்தபடி காத்துக் கிடக்கின்றனர்.

இந்த நேரத்தில் எங்களை எங்க சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாட்டை அரசு செய்து கொடுக்க வேண்டும் அப்படிச் செய்தால் எங்கள் சர்க்கஸ் குழுவைச் சேர்ந்த குடும்பங்களை மட்டுமல்ல சர்க்கஸ் கலையையும் காப்பாற்றிய பெருமை தமிழக அரசை சேரும் என்பதுடன் காலம் உள்ள வரை இந்த உதவியை மறக்க மாட்டோம் என இந்த நேரத்தில் கூறுகிறோம்.

கொரோனா பாதிப்பில் உதவிய தன்னார்வலர்கள்
கொரோனா பாதிப்பில் உதவிய தன்னார்வலர்கள்

ஒரு நூறாண்டுகளாக எங்கள் உயிரைப் பணயம் வைத்து சாகசங்களைச் செய்து மக்களை மகிழ வைத்த நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் பெரும் கூண்டுக்குள் வாசலைப் பார்த்துக்கொண்டு காத்துக் கிடக்கிறோம்" என்றார் கண்ணீருடன்.