Published:Updated:

மதுரையில் தென் தமிழகத்தின் முதல் எலும்பு வங்கி; இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

எலும்பு வங்கி என்பது ரத்த வங்கியைப் போன்றே எலும்புகளை சேகரித்து, அதை சரியான வழிமுறையில் பாதுகாத்து, உரியவருக்கு தேவைப்படும் நேரத்தில் வழங்கும் இடம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து மதுரை ராசாசி அரசு பொது மருத்துவமனையிலும் எலும்பு வங்கி அமையவிருக்கிறது. எலும்பு வங்கி என்றால் என்ன, அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இக்கட்டுரையில் காண்போம்.

எலும்பு வங்கி என்பது, ரத்த வங்கியைப் போன்றே, எலும்புகளைச் சேகரித்து , அதை சரியான வழிமுறையில் பாதுகாத்து, தேவைப்படுபவருக்கு உரிய நேரத்தில் வழங்கும் இடம்.

எலும்பு தானத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும், தண்டுவட நரம்பியல் சார்ந்த அறுவை சிகிச்சைகளிலும், புற்றுநோயால் எலும்புகள் அரிக்கப்பட்ட மக்களுக்கும், சாலை விபத்தில் எலும்பு முறிவுக்குள்ளானோர்களுக்கும் எலும்பு தானம் தேவைப்படுகிறது. உயிரிழந்தவர்களிடம் இருந்து ஏழு மணிநேரத்துக்குள் எலும்புகள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

அந்த எலும்புகளை காமா கதிர்கள் மூலம் தொற்று நீக்கம் செய்து, மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் உறை குளிரில் எலும்பு வங்கியில் சேமிக்கப்படுகின்றன. இந்த எலும்பு வங்கி மூலம் பெறப்படும் எலும்புகள், தேவையானோருக்கு அறுவை சிகிச்சையின் போது பொருத்தப்படுகின்றன.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், செயற்கை மூட்டுகள் (Prosthesis) பொருத்தப்படுவதற்கு பதிலாக இயற்கை எலும்புகளை பொருத்துவதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு உண்டான செலவு ஐந்து மடங்கு குறைக்கப்படுகிறது.

கூடவே, அறுவை சிகிச்சைக்குப் பின்பான தேறுதல் காலம் இயற்கையான எலும்புகளை பொருத்திக்கொண்டவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதையும் காண முடிகிறது.

செயற்கை மூட்டுகள் பொருத்தப்படும் போது எழும் பிரச்னைகள் இயற்கை எலும்புகளைப் பொருத்தும் போது வெகுவாகக் குறைகின்றன. இதன் காரணமாக, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள், தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்களின் தேர்வாய் எலும்பு வங்கிகள் நிச்சயம் இருக்கும். உயிரிழந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகள் ஐந்து வருடங்கள் வரை பாதுகாக்கப்பட்டு தேவை உள்ளவர்களைச் சென்றடைய அடைய இயலும்.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை
முதல்முறையாக திருநம்பிகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் புது முயற்சி!

ரத்த வங்கிச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, தானம் பெறுபவருக்கும் வழங்குபவருக்கும் ஒரே குரூப் ரத்தமாக இருக்க வேண்டும். ஆனால் எலும்பு வங்கியைப் பொறுத்தவரை, அப்படி எந்த வரையறையும் இல்லை. எச்.ஐ.வி , ஹெப்படைட்டிஸ் பி ஆகிய தொற்றுகள் இல்லாமல் இருந்தால் போதும். எலும்புகளின் அளவு மற்றும் நீளத்தைப் பொறுத்து தேவையானவருக்குப் பொருத்தப்படும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த எலும்பு வங்கி தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகருக்குக் கிடைக்க இருப்பது நிச்சயம் சுற்றுவட்ட தென் மாவட்ட மக்கள் பலனடைய மிகவும் உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு