Published:Updated:

keezhadi: கொந்தகையில் கிடைத்த குழந்தையின் எலும்புக் கூடு!

கொந்தகை
கொந்தகை

கீழடி 6-ம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியான கொந்தகையில் குழந்தையின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

விலங்கின் எலும்பு
விலங்கின் எலும்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கின. ஆனால், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும், அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.

உலை
உலை

இதனால் கீழடி 6-ம் கட்ட தொல்லியல் ஆய்வில் 4 இடங்களிலும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் பழைமையான ஈமக்காட்டில் தற்போது முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் கிடைத்துள்ளன.

கொந்தகை
கொந்தகை

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கூறுகையில்,``பண்டைய ஈமக்காடுகளில் இரண்டு முறையிலான முறையில் அடக்கம் செய்துள்ளனர். உடல் தசை சிதைந்த பின் தாழிகளில் வைப்பது அல்லது நோயுற்ற நிலையில் இருந்தால் அப்படியே தாழிகளில் வைத்து புதைப்பது என்று சடலங்களைக் கையாண்டுள்ளனர். சிறு வயதில் குழந்தை இறந்ததென்றால் நோய் ஏற்பட்டு இறந்திருக்கத்தான் அதிக வாய்ப்பு. அதனால், எலும்புகளை எடுத்து தாழிக்குள் வைக்காமல் உடலோடு வைத்திருக்கலாம். மேலும், ஒவ்வொரு உடல் வாகுவுக்கும் ஏற்றாற்போல் முதுமக்கள் தாழிகள் வடிவம் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும். தற்போது கிடைத்துள்ள குழந்தையின் எலும்பு குறித்து தொல்லியல் ஆர்வலர்களின் முழுமையான ஆய்விற்குப் பின்னர்தான் அதன்நிலை தெரியவரும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு