Published:Updated:

`110 அரங்குகள், எழுத்தாளர்களின் கருத்தரங்கம்!’- பிப்ரவரி 1-ம் தேதி முதல் நெல்லை புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பு
புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் புத்தக வாசிப்பாளர்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10 நாள்களுக்கு புத்தகத் திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த 2013-ம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியரான சமயமூர்த்தியின் முயற்சியால் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவுக்கு பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

புத்தகத் திருவிழா நடக்க இருக்கும் மைதானம்
புத்தகத் திருவிழா நடக்க இருக்கும் மைதானம்

அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் அப்போதைய ஆட்சியரான கருணாகரன் ஏற்பாட்டில் கூடுதல் அரங்குகளுடன் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழாவில் ரூ.3.5 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த புத்தகத் திருவிழா, 2018-ல் மீண்டும் நடத்தப்பட்டது.

கடந்த இரு வருடங்களாகவே புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆட்சியரின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்
ஆட்சியரின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர் சதீஷ், ``நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சியில் 110 அரங்குகள் அமைக்கப்பட இருக்கின்றன.

பொதுமக்களின் அறிவுசார் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், நடக்க இருக்கும் இந்தப் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்க வசதியாக பேருந்து வசதிகளைச் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கும் வளாகம்
புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கும் வளாகம்

இந்த விழாவில் நாள்தோறும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களின் கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். உள்ளூர் படைப்பாளிகளின் புத்தகங்களை மேடையில் வெளியிடவும் வசதி செய்துள்ளோம்’’ என்றார்.

பின் செல்ல