Published:Updated:

``அவமானங்கள்தான் இன்ஸ்பிரேஷன்!’’ - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திருநங்கைகள் நடத்தும் DTP மற்றும் Communication மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சுவேதா
சுவேதா

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திருநங்கைகள் நடத்தும் DTP மற்றும் Communication மையம் தொடங்கப்பட்டுள்ளது.

`சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு (Born2Win)' மூலம் திருநங்கைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாடு என சமூகப் பணியாற்றிவரும் திருநங்கை சுவேதாவின் விடாமுயற்சியால் உருவான மையம் இது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இம்மையத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் சுவேதா தன் பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

DTP மற்றும் Communication மையம்
DTP மற்றும் Communication மையம்

``நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். சமூக அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்த நான், 2013-ம் ஆண்டு `சாதிக்கப் பிறந்தவர்கள்' என்னும் அமைப்பை உருவாக்கினேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்டேன். சுற்றியிருப்பவர்களால் அவமானங்களைச் சந்தித்தேன். பணிச்சூழலில் நான் சந்தித்த அவமானங்கள்தான் இந்த சமூக அமைப்புக்கு வித்திட்டது. திருநங்கைகளுக்கு பலர் உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்கு முன்னால் அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவை கல்வியும் வேலைவாய்ப்பும் தான். அதற்கான பாதையை உருவாக்கிக் கொடுப்பதே என் அமைப்பின் நோக்கம்.

புதிய முன்னுதாரணம்..!- கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை

ஒவ்வோர் ஆண்டும் ``மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி’’ என்னும் நிகழ்வை நடத்திவருகிறேன். இதில் பங்குபெறும் திருநங்கைகளுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகளுக்கான சாதனையாளர் விருதும் வழங்கி வருகிறோம். சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் இயங்கிவரும் 11 திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களை கெளரவிக்கும் விதமாக விருது வழங்கி வருகிறோம். ஜெர்மனி, இலங்கை, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் இதற்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களை கெளரவிக்கும்போது மற்ற திருநங்கைகள் மனதிலும் நம்பிக்கை துளிர்விடும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

DTP மற்றும் Communication மையம்
DTP மற்றும் Communication மையம்

திருநங்கைகள் பலர் இன்றுவரை பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் கூட இல்லாமல் இருக்கின்றனர். எங்கள் அமைப்பு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பான் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மூத்த திருநங்கைகள் 5 பேருக்கு ஒரு வருடத்துக்கான பென்ஷன் உதவி செய்துகொடுத்திருக்கிறோம். யூடியூபில் என் நேர்காணலை பார்த்து கிராமப்புறங்களில் இருக்கும் திருநங்கைகள் என்னைத் தேடி வருகிறார்கள். ``எனக்கும் உங்களை மாதிரி சாதிக்கணும்’’ என்று அவர்கள் சொல்லக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். அண்மையில் நண்பர்கள் உதவியுடன் ஒரு திருநங்கைக்கு சுயதொழில் தொடங்க தள்ளுவண்டி உணவகம் வைத்துக் கொடுத்தோம்.

எங்களைத் தேடி வரும் திருநங்கைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்வதைவிட வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம். இந்த VGJA Communication மையம் தொடங்குவதற்கு பல்வேறு தடைகள் வந்தன. பலர் உதவி செய்வதாகக் கூறி கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டனர். எல்லாத் தடைகளையும் தாண்டி இதை சாதித்துக் காட்டியிருக்கிறோம். சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையம் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்.

DTP மற்றும் Communication மையம்
DTP மற்றும் Communication மையம்

Print - xerox - Design Works, இணைய உதவிகள், stationary பொருள்கள் விற்பனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்காக இரண்டு திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்து இந்த மையத்தில் பணியமர்த்தியிருக்கிறோம். இந்தியாவிலேயே முழுக்க முழுக்க திருநங்கைகள் நடத்தும் டிடிபி மையம் இதுவே. என்னைப் பொறுத்தவரை திருநங்கை சமூகம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை இறுதி மூச்சுவரை செய்துகொண்டே இருப்பேன். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்’’ என்றார் உற்சாகம் பொங்க.