Published:Updated:

கடலூர் மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணை உதிரிபாகம்!

கடலூர் மீனவர்களின் வலையில் சிக்கிய மர்மப் பொருள், பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் என்று தெரிய வந்திருக்கிறது.

பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்
பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்

கடலூர் மஞ்சக்குப்பம் தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் அறிவரசன். இவர் வழக்கம்போல மீன்பிடித் தொழிலுக்காக தனது படகில் கடலுக்குள் சென்றிருக்கிறார். அங்கு வலையை வீசிய அறிவரசன், சிறிது நேரத்திற்குப் பிறகு வலையை இழுத்திருக்கிறார். வலை சற்று கனமாக இருக்கவே அதிகமான அளவில் மீன்கள் சிக்கியிருப்பதாக நினைத்து வலையை வெளியே இழுத்தார்.

மர்மப் பொருள்
மர்மப் பொருள்

அப்போது மிகப்பெரிய உருண்டை வடிவிலான மர்மப் பொருள் ஒன்று, வலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதைப் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு கரைக்குத் திரும்பினார்.

சக மீனவர்களிடம் அதுகுறித்து தெரிவித்த அவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறை, கடலோரக் காவல் படை மற்றும் அறிவியல் ஆய்வாளர்களுடன் அங்கு சென்ற தேவனாம்பட்டினம் காவல்துறையினர், அந்த மர்மப் பொருளை ஆய்வு செய்தனர். சுமார் 80 கிலோ எடையுள்ள அந்தப் பொருள் வட்டமான நீலநிற இரும்புத் தட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆய்வு மெற்கொள்ளும் காவல்துறை  மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர்
ஆய்வு மெற்கொள்ளும் காவல்துறை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர்

உருண்டை வடிவிலான அந்த மர்மப் பொருளின் மீது BrahMos BIFP-04 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஏவுகணையின் உதிரிபாகம் போல இருந்ததால் வெடிக்கும் வாய்ப்புகள் இருக்குமோ என்று அச்சத்துடனே அதை அணுகினர் அதிகாரிகள். ஆனால், சிறிது நேரத்தில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் அந்த உதிரிபாகத்தை முழுமையாக ஆய்வுசெய்துவிட்டு, அது வெடிக்கும் தன்மையைக் கொண்டது இல்லை என்று உறுதி செய்தனர்.

அந்த மர்மப் பொருள் குறித்து தெரிவித்த அதிகாரிகள், ``மீனவர் அறிவரசன் வலையில் சிக்கிய அந்தப் பொருள் ’பிரமோஸ் BIFP-04’ என்ற ஏவுகணையின் உதிரிபாகமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதிக எடையுள்ள வெடிபொருள்களைத் தாங்கிச் செல்லும் இந்த `பிரமோஸ் BIFP-04’ வகை ஏவுகணை, இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பில் வடிவமைக்கப்பட்டது.

கடலோரக் காவல் பாதுகாப்புக் குழு இன்ஸ்பெக்டர் சங்கீதா
கடலோரக் காவல் பாதுகாப்புக் குழு இன்ஸ்பெக்டர் சங்கீதா

இது நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனைக் கொண்டது. தற்போது சிக்கியிருக்கும் இந்த உதிரிபாகம் கடந்த 2017-18 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலோரப் பாதுகாப்புக் குழுவின் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ``அந்த மர்மப் பொருள் பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால், அது வெடிக்கும் தன்மை கொண்டது இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது அந்தப் பொருள் உள்ளூர் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம். அவர்கள் வந்து எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஏவுகணையின் உதிரிபாகம்
ஏவுகணையின் உதிரிபாகம்

வலையில் சிக்கிய ஏவுகணையின் அந்தப் பாகத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் வலையில் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளின் உதிரிபாகம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.