Published:Updated:

`எனக்குன்னு குடும்பம் இருந்தா இப்படி நடந்திருக்குமா?’-அண்ணன்கள் விரட்டியதால் கலங்கும் தம்பி #Corona

ராஜூ
ராஜூ ( ம.அரவிந்த் )

இத்தனை நாளா எனக்குக் கல்யாணம் ஆகலையேன்னு எந்த வருத்தமும் படலை சார் எனக்கு எதாவதுன்னா என் அண்ணங்க இருக்காங்க என நினைத்தேன். ஆனா இப்பதான் நான் கல்யாணம் பண்ணிக்காததை நினைத்து வருத்தப்படுகிறேன்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் உறவுகளைக் காக்கக் கூடிய எத்தனையோ நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்த தம்பி ஒருவரை அவரது இரண்டு அண்ணன்களும் ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரட்டப்பட்ட ராஜூ
விரட்டப்பட்ட ராஜூ

பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜூ (55). இவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற ராஜூ சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது வளவன்புரத்தில் உள்ள உடன் பிறந்த அண்ணனான ரமேஷ் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில்,கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சென்னையில் ராஜூ பணிபுரிந்த ஹோட்டல் மூடப்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் போனதில் சாப்பாட்டுக்கே கஷ்டபடும் நிலை ஏற்பட்டது. அத்துடன் தற்போது சென்னையில் கொரோனா அதிகரித்து வருவதால், தன் சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணன்கள் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்த ராஜூ உடன் பணிபுரிந்த சிலரிடம், `என் அண்ணன்களிடம் சென்று விட்டால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் என்னைப் பார்த்துக்கொள்வார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

அதிகாரிகளுடன் ராஜூ
அதிகாரிகளுடன் ராஜூ

இதையடுத்து பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து இல்லாததால் ராஜூ லாரி மூலம் சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வந்துள்ளார். பின்னர் நேராக தனது அண்ணன் வீட்டிற்குச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராஜூவின் அண்ணன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா அச்சத்தால் ராஜூவை வீட்டிற்குள் சேர்க்க மறுத்துடன், `உன்னை யார் இங்கு வரச் சொன்னது. நீ உடனே இங்கிருந்து போ’ எனத் துரத்தியுள்ளனர்.

இதையடுத்து அண்ணன் அணைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஊர் வந்த ராஜூவிற்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்ததுடன் கண்கள் கலங்க என்ன செய்வது எனப் புரியாமல் தவித்துள்ளார். பின்னர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள அண்ணா அரங்கில் தங்கியுள்ளார். புதிதாக ஒருவர் வந்து தங்கியிருப்பதை கவனித்த அப்பகுதி டாக்சி டிவைர்கள் நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 நகராட்சி ஆணையர் சுப்பையா
நகராட்சி ஆணையர் சுப்பையா

இதையடுத்து அண்ணா அரங்கிற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் ராஜூவிடம் விசாரித்ததுடன் அவருக்குக் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் வரும் வரை அவரின் அண்ணனிடம், `உங்க வீட்டிலேயே பின்புறத்தில் உள்ள இடத்தில் தங்க வைத்துக்கொள்ளுங்க’ என அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை. ஒரு வழியாகப் பேசி சம்மதிக்க வைத்து அங்கேயே தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால் ராஜூவிற்கு நாங்க சாப்பாடு கொடுக்கமாட்டோம் எனக் கூறியதையடுத்து அம்மா உணவகத்திலிருந்து உணவு கொடுப்பதற்கு நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரவிசந்திரன் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ராஜுவை அவரது அண்ணன்கள் விரட்டியடிக்க ராஜூ நாடியம்மன் கோயிலில் தங்கியுள்ளார்.

`என்னைப் பற்றிக் குறைகூறிய அந்தத் தம்பி!' -பட்டுக்கோட்டை நிர்வாகி புகாருக்குப் பழநிமாணிக்கம் பதில்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் பேசினோம். ``ராஜூவிற்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனர். ஒருவர் டீக்கடையில் வேலை பார்க்கிறார் மற்றொருவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார். அவர்களும் இந்த நேரத்தில் வறுமையில் உள்ளனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து வந்த ராஜூவால் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்க பேசியும், `இந்த நேரத்தில் ஏன் சார் இங்க வந்தான்?’ எனக் கேட்டனர். ராஜூவிற்குக் காது கேட்பதில் வேறு பிரச்னை உள்ளது.

இதையடுத்து கோயிலில் தங்கியிருக்கும் அவரால் மற்றவர்களுக்குப் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். `இத்தனை நாளா எனக்கு கல்யாணம் ஆகலையேன்னு எந்த வருத்தமும் படலை சார். எனக்கு எதாவதுன்னா என் அண்ணங்க இருக்காங்க என நினைத்தேன். ஆனா இப்பதான் நான் கல்யாணம் பண்ணிக்காததை நினைத்து வருத்தப்படுகிறேன்.

லாக்டெளனால் பாதிக்கப்பட்ட ராஜூ
லாக்டெளனால் பாதிக்கப்பட்ட ராஜூ

எனக்குன்னு ஒரு குடும்பம் இருந்திருந்தா, இந்த நிலை ஏற்பட்டிருக்காது. நான் தனி ஆளாகவும் நின்னுருக்க மாட்டேன்’ என சோகத்துடன் ராஜூ கூறினார். `வருத்தப்படாதப்பா உனக்கு என்ன வேண்டுமோ அதை நாங்க செய்கிறோம்’ எனக் கூறி அவருக்கு வேண்டியைச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு