Published:Updated:

புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில் சட்டப்பேரவைக் கூட்டம்

புதுச்சேரி திறந்தவெளி சட்டப்பேரவைக் கூட்டம்
புதுச்சேரி திறந்தவெளி சட்டப்பேரவைக் கூட்டம்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்றைய பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முதல் முறையாகத் திறந்தவெளியில் நடைப்பெற்றன.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,483 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீதமுள்ள 997 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

இச்சூழலில் கடந்த 20-ம் தேதி முதல் புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தொடர்ந்து 3 நாள்கள் கலந்துகொண்ட கதிர்காமம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், பேரவையில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய கிரண் பேடி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில்  சட்டப்பேரவைக் கூட்டம்

தொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதேபோல இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அறிவித்தார். அதையடுத்து மதியம் 12.30 மணிக்கு திறந்தவெளியில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த வேப்பமரத்தின் அடியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டன. அத்துடன் அனைத்து இருக்கைகளிலும் மைக்குகள் வைக்கப்பட்டன.

புதுச்சேரி: `எம்.எல்.ஏ-க்கு கொரோனா பாசிட்டிவ்!’ - அதிர்ச்சியில் முதல்வர், ஆளுநர்

இந்தக் கூட்டத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வருகை தராத நிலையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மட்டும் கலந்துகொண்டனர். நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றபட்டதையடுத்து, காலவரையின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறித்தினார் முதல்வர் நாராயணசாமி.

மரத்தடியில் தயாராகும் சட்டப்பேரவை
மரத்தடியில் தயாராகும் சட்டப்பேரவை

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார் மாநிலத்திலும் இன்றைய மழைக்கால கூட்டத்தொடர் திறந்தவெளியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு