Published:Updated:

`3 பிரிவுகள்; மாலை, பதக்கங்கள்!'- தூத்துக்குடி மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் தொடர்ந்து 2 நாள்களாக மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் 120-க்கும் மேற்பட்ட காளை மாடுகளும் பங்கேற்றன.

பொங்கல் பண்டிகை என்றாலே தென் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டும், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் எருதுவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுவது நினைவுக்கு வரும். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாட்டுவண்டிப் போட்டிகள்தான் நினைவுக்கு வரும். பொங்கல் பண்டிகையின் மறுநாள் முதல் இன்று வரை மாவட்டம் முழுவதும் தொடர் மாட்டுவண்டிப் போட்டிகளே நடந்து வருகின்றன.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

இதில், செக்காரக்குடி, தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயம் சிறப்பு பெற்றது. சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 261-வது பிறந்தநாள் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் 437-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மாட்டுவண்டிப் பந்தயம் தட்டப்பாறையில் இன்று நடைபெற்றது.

Vikatan

பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரிய மாட்டுவண்டி 14 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிக்கு 8 கி.மீ தூரமும் போட்டிக்கான எல்லைகளாக அறிவிக்கப்பட்டது.

வண்டி தயார் செய்தல்
வண்டி தயார் செய்தல்

இதில், தென் மாவட்டங்களில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.

பந்தயம் தொடங்குவதற்கு முன்னதாக, சாமி கும்பிட்டுவிட்டு, காளைகளுக்கு மாலை அணிவித்து வண்டிகளில் கட்டப்பட்டன. தொடர்ந்து கற்பூர ஆரத்தி கட்டப்பட்டது. முதலில் பெரிய மாட்டுவண்டி, இரண்டாவதாக சிறிய மாட்டு வண்டி, மூன்றாவதாக பூஞ்சிட்டு பந்தயமும் நடைபெற்றது. போட்டிகளைப் பார்ப்பதற்காக சாலையின் இருபக்கங்களிலும் கிராம மக்கள் கூடியிருந்தனர்.

வெற்றி பெற்ற காளைகள்
வெற்றி பெற்ற காளைகள்

இளைஞர்களின் கைதட்டல், விசில் சத்தத்தில் சீறிப் பாய்ந்தன காளைகள். ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டுவண்டியின் உரிமையாளர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் காளைகளுக்கு மாலையும், உரிமையாளர்களுக்குப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

இதுகுறித்து தட்டப்பாறையைச் சேர்ந்த மாட்டுவண்டிப் பந்தயக்காரர்களிடம் பேசினோம்.``எங்க ஊரு, மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு சிறப்பு பெற்றது. கார்த்திகை, மார்கழி மாதத்திலேயே மாடுகளை பந்தயத்துக்காக தயார்படுத்துவோம். தினமும் காலை, மாலையில் காளைகளைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி, கண்மாயில் நீச்சல் பயிற்சியும் அளிக்கிறோம். உளுந்து கரைசல், பிண்ணாக்கு, பேரீச்சம்பழம், நாட்டுக்கோழி முட்டை ஆகிய சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுப்போம்.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

காளை ஓடும்போது, கால் வலிமையாக இருப்பதற்காக ஆட்டுக்கால் சூப் கொடுக்கிறோம். இதுபோல காளைகளைக் கண்ணும் கருத்துமா பார்ப்போம். தினமும் வண்டியில் பூட்டி காளைகளுக்கு ஓட்டப்பயிற்சியும் அளிக்கிறோம். இதுபோன்ற பக்குவமான கண்காணிப்பில்தான் காளைகள் பந்தயத்துல குதிரைகளைப்போல சீறிப் பாய்ந்தன” என்றனர். பொங்கல் பண்டிகை மட்டுமல்லாமல், கோயில் திருவிழாக்களின் நிறைவுநாளிலும் இதுபோன்ற மாட்டுவண்டிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு