Election bannerElection banner
Published:Updated:

மாட்டுவண்டியில் மனு வாங்கும் திட்டம்! - கார்த்தி சிதம்பரம் காரிலேயே முட்டி நின்ற மாட்டுவண்டி

கார்த்தி சிதம்பரம் காரில் முட்டிய மாட்டு வண்டி
கார்த்தி சிதம்பரம் காரில் முட்டிய மாட்டு வண்டி

`பா.ஜ.க ஆட்சியில் வரிமேல் வரிபோட்டு, குழப்பமான பண மதிப்பிழப்பீடு, ஜி.எஸ்.டி எனப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.’ - கார்த்தி சிதம்பரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. வெற்றிக் கனியைப் பறிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்துவருகின்றனர். அகில இந்தியத் தலைவர்களின் வருகையும் தமிழகத்தில் அடிக்கடி நிகழ்ந்துவருகிறது. ஒருபுறம் தேர்தல் பிரசாரப் பணிகள் என்றால், மறுபுறம் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளும் கட்சிகளின் சார்பில் தீவிரமாக நடந்துவருகின்றன. மக்களின் மனதில் இடம்பெற வேண்டும் என அரசியல் கட்சியினர் மக்களைச் சந்தித்துவருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் மாட்டுவண்டியில்
கார்த்தி சிதம்பரம் மாட்டுவண்டியில்

காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டி மூலம் மனுக்களளைப் பெற்று வருகின்றனர். இந்த்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் மாட்டுவண்டியில் பெட்டிவைத்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம், ``குஜராத்தில் பெட்ரோல் விலையை ஏற்றி மோடி செஞ்சுரி அடித்ததால்தான், அகமதாபாத்தில் மோடியின் பெயரை கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. ஆனாலும், விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

பா.ஜ.க ஆட்சியில் வரிமேல், வரிபோடுகிறார்கள், குழப்பமான பண மதிப்பிழப்பீடு, ஜி.எஸ்.டி எனப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி... என கையாலாகாத அரசாக இது இருக்கிறது. தமிழக அரசு நிர்வாகக் கோளாறு காரணமாக, ஓய்வுபெறும் நபர்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியிருக்கிறது. அங்கன்வாடி ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றியதால் தற்போது போராடிவருகின்றனர்" என்றார்.

கொடி அசைத்த கார்த்தி சிதம்பரம்
கொடி அசைத்த கார்த்தி சிதம்பரம்

மாட்டுவண்டியில் மனு வாங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கும் முன் கார்த்தி சிதம்பரம் மாட்டுவண்டியில் ஏறி கேமராக்களுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் இறங்கி மாட்டுவண்டியில் மனுக்கள் வாங்கச் செல்ல வண்டிக்குக் கொடி அசைத்தார். அப்போது மாடு வெறித்து தாறுமாறாக ஓடி, கார்த்தி சிதம்பரம் காரில் மோதி நின்றது. பிறகு மாட்டுவண்டியை அங்கிருந்து தள்ளிக்கொண்டு சென்றனர். நல்லவேளை அவர் மாட்டுவண்டியில் ஏறி நிற்கும்போது மாடு தாறுமாறாக ஓடவில்லை என்பதுபோல் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் காங்கிரஸார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு