தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் 5-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை பணிக்குச் சென்ற ஸ்ரீதர் காலக்கோட்டிலிருந்து சேலத்திற்குப் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் மல்லாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் வந்தவுடன் பேருந்திலிருந்த பயணிகளிடம், ``என்னுடைய ஜனநாயக கடமையைச் செய்துவிட்டு வருகிறேன்.

பத்து நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள்" என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். இதைக் கவனித்த பயணிகள், `நீங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வரும் வரை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். நீங்கள் வாக்களித்துவிட்டு வாருங்கள்' என்று அனுப்பி வைத்தனர். அதன்படி, ஸ்ரீதரும் தன்னுடைய ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு, பேருந்து பயணிகளுடன் சேலம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீதரின் இந்த செயலைக் கண்டு பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.
இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.