தமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா? #DoubtOfCommonMan

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு மட்டுமல்ல, குலுக்கல் முறையில் நடத்தப்படும் எல்லா அதிர்ஷ்டப் போட்டிகளுக்கும் தடை இருக்கிறது.
ஒருகாலத்தில் தமிழகம் இப்படித்தான் இருந்தது...
தமிழகத்தில் பலரது பொழுதுகள் லாட்டரிச் சீட்டில்தான் விடியும். மாநில வாரியாக வண்ண வண்ணமாக லாட்டரி சீட்டுகள் தமிழக கடைகளில் குவிந்திருந்தன. அருணாசலப் பிரதேசம், சிக்கிம், உத்தரப்பிரதேசம் என இந்திய மாநிலங்களின் பெயரையே லாட்டரி சீட்டில்தான் பலர் கற்றுக்கொண்டார்கள். கிராமம், நகரம் வேறுபாடின்றி சைக்கிளில், டூவீலரில், காரில் வந்து ஆசையைத் தூண்டும் விதத்தில் விளம்பரம் செய்து லாட்டரி சீட்டுகளை விற்றுச் செல்வார்கள். லாட்டரி சீட்டு ரிசல்ட்டுக்காகவே நாளிதழ்கள் நடத்தப்பட்டன. பல குடும்பங்கள் லாட்டரியால் தெருவுக்கு வந்தன. மதுவுக்கு அடிமையானதுபோல பலர் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகிக் கிடந்தார்கள்.
இப்படி இதன் பாதகங்களை உணர்ந்த தமிழக அரசு 2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``கேரள அரசு லாட்டரி சீட்டு நடத்துகிறது. தமிழகத்தில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளவர்கள் கேரள அரசு விற்பனை செய்யும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் கே.செந்தில்குமார் என்ற வாசகர்.

கேரளாவில் லாட்டரிச் சீட்டுக்குத் தடையில்லை. மாநில அரசே அங்கு லாட்டரிச் சீட்டு விற்பனை செய்கிறது. கேரளாவையொட்டியிருக்கும் குமரி மாவட்டம், கோவை மாவட்டப் பகுதிகளில் கேரள லாட்டரி சீட்டுகள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. வாசகரின் கேள்வியை வழக்கறிஞர் கோதண்டராமன் முன்வைத்தோம்.
``தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ் தமிழகத்தில் 2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் இச்சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது.
`தினக்கூலிக்கு செல்லும் ஏழை மக்கள் இதில் பணத்தை இழக்கின்றனர். அவர்களின் வருமானம் இதன் மூலம் பறிக்கப்படுகிறது' என்பதால் இந்தச் சட்டத்தைத் தமிழகத்தில் கொண்டு வந்தார் ஜெயலலிதா.
இந்தச் சட்டத்தின்படி லாட்டரி சீட்டு விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. லாட்டரி சீட்டை மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில், தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், தமிழகத்தில் உள்ள நபர் மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகளை வாங்க எந்தத் தடையும் இல்லை. இந்தச் சட்டம் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யத்தான் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை இல்லை.

இந்தியாவின் 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை இல்லை. மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் அந்தச் சட்டம் பொருந்தும். கேரள அரசு லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்யவில்லை. இந்தியாவின் 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை இல்லை. தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு மட்டுமல்ல, குலுக்கல் முறையில் நடத்தப்படும் எல்லா அதிர்ஷ்டப் போட்டிகளுக்கும் தடை இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி ஒரு போட்டி நடத்தியது. அந்த விளம்பரத்தில் `இந்த சலுகை இந்தியாவில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் செல்லுபடியாகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இந்த மாதிரியான லாட்டரி சீட்டு, குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பிற மாநிலங்களில் நடத்தப்படும் லாட்டரி சீட்டுகளைத் தமிழகத்தில் உள்ளவர்கள் வாங்குவதற்குத் தடை இல்லை.
இந்தச் சட்டத்தை மீறி தமிழகத்தில் குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்குதல், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தல், விளம்பரப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் மூன்று மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்."

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!