Published:Updated:

அரசு நினைத்தால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய முடியுமா... என்ன சொல்கிறது சட்டம்? #Gambling Act

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டுமென மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஆன்லைன் சூதாட்டம்' தமிழகத்தை அச்சுறுத்தும் சொல்லாக மாறிவிட்டது. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியல் அதிகரித்தபடியே உள்ளது. பலரும் தங்களின் அலைபேசி வழியே மறைமுகமாக விளையாடி வந்த இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தற்போது பலரையும் அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. சில வாரங்களுக்குமுன் பாண்டிச்சேரியில் 38 லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து, கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் விஜயகுமார் என்பவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சமீபத்தில் ஒரே நாளில் கோவையில் இரண்டு பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டனர். தொடர்கதையாகிவிட்ட இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, அரசு இதில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. ஏற்கனவே கணிசமானவர்களின் மொபைலுக்குள் தஞ்சமாகியிருந்த ஆன்லைன் ரம்மி, கொரோனா லாக் டவுன் காலத்தில் இன்னும் அதிகரித்தது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்களில் சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் கவனத்தைத் தொலைத்தார்கள். சூதாடுவது தவறெனத் தெரிந்தவர்கள் தங்களது மொபைல்களில் யாருக்கும் தெரியாத வண்ணம் பணத்தைத் தொலைத்தார்கள். ஆன்லைன் ஆப்கள் வழியே கடன் வாங்கி அந்தப் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொலைத்தவர்கள் பலர்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

சிறிய தொகையை வென்றவர்கள் பலரும் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்ற ஆரம்பித்தனர். இறுதியில் கையிருப்பை இழந்து , கடன் வாங்கி விளையாடி கடைசி வரை விட்ட பணத்தை எடுக்க முடியாமல் மன நிம்மதியை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டனர். பலர் பணத்தை இழந்ததை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலில் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டுமென மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

கடந்த ஜூலை மாதமே, ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. முன்பு, தமிழகத்தில் பல குடும்பத்தை உருக்குலைத்த லாட்டரிச் சீட்டை தமிழக அரசு தடை செய்தது. அதேபோல மாணவர்கள் தொடங்கி குடும்பத் தலைவர்கள்வரை பலரது வாழ்வையும் சிர்குலைக்கும் ஆன்லைன் ரம்மியையும் தடை செய்ய வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.

நேற்று இது தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துள்ளனர். பொது மக்களின் நன்மையை கருதி, இதுபோன்று அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், அவற்றை நடத்துபவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

'ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வாய்ப்பிருக்கிறதா?' வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

" சூதாட்டத்தைத் தடுக்கும் விதமாக நம்மிடம் 'Gambling Act' உள்ளது. அதை வைத்துதான் சூதாடுவதைத் தடை செய்கிறோம். உச்சநீதி மன்றம் ஆன்லைனில் இல்லாமல் நேரில் விளையாடும் சூதாட்டங்கள் குறித்து சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. ரம்மி விளையாடுவது ஒரு திறமை. அறிவுத் திறனை வளர்க்கக்கூடிய விளையாட்டு. அதை விளையாடலாம் என்றே உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பணம் வைத்து சூதாட்டமாக விளையாடுவது குற்றம் என்கிறது.

ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர் க்ரைம் அதிகாரி

தற்போது அரசு ஆன்லைனில் பணம் கட்டி ரம்மி விளையாட அனுமதித்திருப்பது சட்ட விரோதம். ஒருபுறம் அரசு சூதாடுவது தவறு என சட்டம் இயற்றிவிட்டு மறுபுறம் இதுபோன்ற விளையாட்டுகளை அனுமதிப்பது தவறான ஒன்று. சூதாட்ட ரம்மியைத் தடுத்தவர்களால் ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தை தடுக்க முடியவில்லை. இது ஒரு சட்ட விரோதம். தமிழகத்தில் நாம் இதற்கு முன்பே சூதாட்டங்களை தடுத்திருக்கிறோம்.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி
'Online Rummy is a Prohibited Offence' என 'Gambling Act' -ல் சட்டத் திருத்தத்தை செய்து அரசு இதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்யலாம்.
வழக்கறிஞர் புகழேந்தி

'Gambling Act' என்பது 'Central Act'. ஆனால், மாநில அரசுகள் அதில் திருத்தங்கள் கொண்டுவந்து தனது மாநிலத்துக்கு மட்டும் நடைமுறைபடுத்தலாம். அப்படித்தான் தமிழக அரசு லாட்டரியைத் தடை செய்தது. ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்தான். சிலர் சட்ட விரோதமாக விளையாடக்கூட முயற்சிக்கலாம். ஆனால் அரசு நினைத்தால் நிச்சயமாகத் தடைசெய்ய முடியும். 'Online Rummy is a Prohibited Offence' என 'Gambling Act' -ல் சட்டத் திருத்தத்தை செய்து அரசு இதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்யலாம். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. பணம் சம்பாதிக்கும் ஆசையில் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு ஆன்லைன் ரம்மியால் மக்கள் வாழ்வு பறிபோவதைத் தடுக்கலாம்" என்றார்.

பல பொதுநல வழக்குகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்டு வருகின்றன. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் போகாமலிருக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு