Published:Updated:

`கொரோனா நோய்த் தொற்று இல்லாதபோதும் கூடுதல் வசூல்!’ தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கொரோனா
கொரோனா

கொரோனா இல்லாதவருக்கு சிகிச்சை அளித்து 5 லட்சம் ரூபாய் வசூல் செய்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா என்ற கொடூர காலகட்டத்தில் பலரும் கஷ்டத்தை அனுபவித்தனர். உயிர் பயத்தை ஏற்பத்திய கொரோனோ நோய்த் தொற்றுக்கு அரசு மருத்துவமனையையும், தனியார் மருத்துவமனையையும் நாடினர். இந்தநிலையில் கொரோனா நோய்த் தொற்றுக்குச் சில தனியார் மருத்துவமனைகள் லட்சக் கணக்கில் வசூல் செய்ததாகப் புகார் எழுந்திருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த கமால் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், ``கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் பாதிப்படைந்த நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க பல தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

கொரோனா
கொரோனா

இதைச் சில தனியார் மருத்துவமனைகள் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தொற்று இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன. இதனால் பலரும் தங்களின் பணத்தை அதிக அளவில் இழந்திருக்கிறார்கள். மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்று இல்லாத எனக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற்றதற்கான தொகையை செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

ஆனால், அரசு விதிமுறைப்படி குறைந்த அளவு தொகை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது போன்று பல மருத்துவமனைகள் கொரோனா காலத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கான தொகை என வசூலிக்கின்றன. இதை அரசு உடனடியாக உற்று நோக்கி, அளவுக்கதிகமாக வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

hc madurai
hc madurai

மேலும் கொரோனா இல்லாத எனக்கு, போலியாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து, செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவமனை சார்பில் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு