Published:Updated:

கோத்தகிரியில் விடிய விடிய நடந்த ரெய்டு; துணை தாசிலாதார் உள்ளிட்ட 8 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு!

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற தாசில்தார் கையெழுத்துடன்கூடிய அனுபோகச் சான்று பெற வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள், இடைத்தரர்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பணத்தை லஞ்சமாகப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது. இந்தப் புகாரின் அடிப்படையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு தலைமையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர் உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட குழுவினர் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தின் இரண்டு நுழைவு வாயில்களை மூடி, அங்கிருந்த பொதுமக்கள், இடைத்தரகர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அலுவலகக் கோப்புகளையும் ஆய்வு செய்தனர்.

கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம்
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம்

விடிய விடிய நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 42,690 ரூபாய் ரொக்கத்தைக் கைப்பற்றி அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் தனலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயந்தி, நெடுகுளா வருவாய் ஆய்வாளர் கோபிநாத், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், கமல், பிரதீப்குமார், யுவராஜ் ஆகிய எட்டு அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த முறைகேடு குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ``கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற தாசில்தார் கையெழுத்துடன்கூடிய அனுபோகச் சான்று பெற வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

இந்தச் சான்றிதழ் வாங்க விவசாயிகள் பலர் தாலுகா அலுவலகம் வருகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இடைத்தரர்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர். எட்டு அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு