Published:Updated:

சிவகங்கை: தொடர் சர்ச்சை... வழக்கு பதிவு! - தலைமறைவான ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

துணைத் தலைவர்
துணைத் தலைவர்

துணைத் தலைவர் பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ளது சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம். அதிக வாக்காளர்களைக்கொண்ட மிகப்பெரும் ஊராட்சிகளில் சங்கராபுரம் ஊராட்சியும் ஒன்று. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலின்போது அதிகாரிகள் செய்த குழப்பத்தால் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டதும், இதனால் தேர்தல் முடிவில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டதும் அனைவரும் அறிந்ததே!

கோப்புப் படம்
கோப்புப் படம்

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி உறுதி செய்யப்படாததால், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாண்டியராஜன் தற்காலிகமாக தலைவர் பொறுப்பு வகித்துவருகிறார். பொறுப்பேற்றது முதல் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இது தொடர்பாக காரைக்குடி வடக்கு, தெற்கு, குன்றக்குடி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தண்ணீர்த் தொட்டி சூப்பர்வைசராக இருந்துவரும் வளர்மதியை பாண்டியராஜன் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு வருமாறு போனில் அழைத்துள்ளார். ஆனால் வளர்மதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடைய கணவர் சேகர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்று துணைத் தலைவர் பாண்டியராஜனை சந்தித்துள்ளார். அப்பொழுது `நீர்த்தேக்கத் தொட்டியை உங்கள் மனைவி சரியாக பராமரிக்கவில்லை’ என்று கூறி, வளர்மதியைத் தகாத வார்த்தைகளால் பாண்டியராஜன் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

துணைத் தலைவர்
துணைத் தலைவர்

இதனால் வளர்மதியின் கணவர் சேகருக்கும், துணைத் தலைவர் பாண்டியராஜனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த அவருடைய நண்பர்களான கணேசன், கார்த்திக், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று பேரும் பாண்டியராஜனுடன் சேர்ந்து சேகரை சாதிரீதியாகச் சொல்லி திட்டியும், அடித்தும் கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதில் காயமடைந்த சேகர், சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை செய்ததில், புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் உண்மை எனத் தெரியவந்ததை அடுத்து, துணைத் தலைவர் பாண்டிராஜன் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்ததை அறிந்த பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு