Published:Updated:

கரூர்: ஊராட்சி மன்றத் தலைவிக்கு எதிராக சாதிய பாகுபாடு; நால்வர்மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகம்

கரூர் மாவட்ட தி.மு.க பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவிமீது சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு பேர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கரூர்: ஊராட்சி மன்றத் தலைவிக்கு எதிராக சாதிய பாகுபாடு; நால்வர்மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

கரூர் மாவட்ட தி.மு.க பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவிமீது சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு பேர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகம்

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது நன்னியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள துவரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அ.தி.மு.க சார்பில் தேர்தலில் நின்று ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கடந்த, 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், அ.தி.மு.க-விலிருந்து விலகி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய தனியார் தொண்டு நிறுவன அமைப்பு ஒன்று, தமிழ்நாடு முழுவதும் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாதிய வன்கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

 விசாரணை நடத்திய அதிகாரிகள்
விசாரணை நடத்திய அதிகாரிகள்

அதனடிப்படையில், இந்த ஊராட்சி நிர்வாகத்தில் மாற்றுச் சமூகத்தின் தலையீடு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து உண்மை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாடு அரவுக்கு உண்மை கண்டறியும் குழு, தனது அறிக்கையை அனுப்பி வைத்திருந்தது. அதனடிப்படையில், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் நன்னியூர் ஊராட்சியில் திடீர் விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, ஊராட்சி செயலாளர் ஆகியோர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர்.

அந்த விசாரணையின்போது கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை பிரிவு அலுவலர் லீலாகுமார், கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். விசாரணையில், ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிராக சாதிய பாகுபாடு காட்டப்பட்டது தெரியவந்தது. உடனடியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை பேரில் நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த 22-ம் தேதி பரபர புகார் ஒன்றைக் கொடுத்தார்.

 சுதா (ஊராட்சிமன்ற தலைவி)
சுதா (ஊராட்சிமன்ற தலைவி)

சாதிய பாகுபாடு காரணமாக ஊராட்சி மன்றத் தலைவராக தன்னை பணி செய்ய விடாமல் தடுக்கும் 9-வது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் நல்லுசாமி, முன்னாள் நன்னியூர் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசாமி ஆகியோர் தூண்டுதலின் நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி, நளினியின் கணவரான மக்கள் நல பணியாளர் மூர்த்தி ஆகியோர்மீது வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பட்டியல் சமுதாய ஊராட்சி மன்றத் தலைவருக்கு நடந்த இந்த சாதிய பாகுபாடு குறித்த விவகாரம், பலரையும் அதிரவைத்தது. சுதா கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் இந்த விவகாரத்தை சாதாரணமாக்கும் காரியத்தில் இறங்கியதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, அ.தி.மு.க-வை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசாமி, நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினி, அவர் கணவரான மக்கள் நல பணியாளர் மூர்த்தி ஆகியோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

 விசாரணை நடத்திய அதிகாரிகள்
விசாரணை நடத்திய அதிகாரிகள்

அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் நான்கு பேரையும் வாங்கல் காவல் நிலைய போலீஸார், வலை வீசி தேடி வருகின்றனர். அதோடு, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள நன்னியூர் ஊராட்சி செயலாளர் நளினியை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டிருக்கிறார். ஊராட்சி செயலாளரின் கணவர் மூர்த்தி மக்கள் நல பணியாளராக பணியாற்றி வருவதால், அவர்மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருக்கிறார்.