Published:Updated:

விழுப்புரம்:கோயில் திருவிழாவை முன்பே நடத்தியதால்,பட்டியல் சமூக முதியவர்களை காலில் விழவைத்த கொடூரம்!

விழுப்புரம்
விழுப்புரம்

"காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுகிறோம்" என மாற்று சமூகத்தினர் சிலர் கூறியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டனந்தல் எனும் சிறு கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலினத்தவர் சுமார் 40 குடும்பங்களும், மாற்று சமூகத்தினர் சுமார் 250 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நேற்று(14.05.2021) காலை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ( சந்தானம், ஆறுமுகம், திருமால்) மூவரை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கிராம பஞ்சாயத்தில் காலில் விழவைத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த நபர்களிடம் விசாரித்தோம். "பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 9-ம் தேதி கூழ் வார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி கேட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிய அளவிலேயே கூழ்வார்த்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். அத்துடன், கடந்த 12-ம் தேதி இரவு அப்பகுதி சிறுவர்களைக் கொண்டு மேடை அமைத்து கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம்:கோயில் திருவிழாவை முன்பே நடத்தியதால்,பட்டியல் சமூக முதியவர்களை காலில் விழவைத்த கொடூரம்!

கொரோனா தொற்று நேரம் என்பதினால், அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் கலை நிகழ்ச்சியை நிறுத்தியதோடு, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 13 ம் தேதி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இரவு 9 மணி அளவில் மீட்டு வந்துள்ளனர் மக்கள். ஊரின் அருகே வந்தபோது புகார் அளித்த ரமேஷ் எனும் நபர் தகாத வார்த்தைகளைக் கூறித் திட்டியுள்ளார்.இது தொடர்பாக நேற்று (14.05.2021) மாற்று சமூகத்தினர் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்களிடையே பஞ்சாயத்து நடைபெற்ற போதுதான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

"ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க... பிரச்சனை வேண்டாம்" என பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபர்கள் மாற்று சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்து நாட்டாமைகளிடம் கேட்டபோது, "காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுகிறோம்" என மாற்று சமூகத்தினர் சிலர் கூறியுள்ளனர். வேறு வழியின்றி பட்டியல் சமூகத்தை சேர்ந்த 3 பெரியவர்கள், வெற்றிலை தாம்பூலம் வைத்து பஞ்சாயத்து நாட்டாமை கால்களில் விழுந்துள்ளனர். அதே நேரத்தில் பட்டியலில் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தகாத வார்த்தையைக் கூறி, "காலில் விழுந்தால் என்ன குறைந்தா போய்விடுவாய்" என ஏளனம் செய்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களைத் தாக்கியுள்ளனர் மாற்று சமூக இளைஞர்கள். இச்சம்பவமே சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "வழக்கமாக மாற்று சமூகத்தினர் கூழ் வார்த்தல் திருவிழாவை நடத்திய பின்னரே பட்டியல் சமூகத்தினர் நடத்துவார்கள்.

 ஒட்டனந்தல்
ஒட்டனந்தல்

இந்த முறை பட்டியல் சமூகத்தினர் முன்னதாகவே திருவிழாவை நடத்தினர். இதனால் மாற்று சமூகத்தினருக்கு ஏற்பட்ட வெறுப்பும் ஒரு காரணம்" என்கின்றனர் அப்பகுதி பட்டியலின மக்கள். இரு தரப்பினரிடையேயும் புகார்களை பெற்றுள்ள காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து, இரண்டு நபர்களை கைது செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான செய்தி வேகமாக பரவியதாலும், மேலும் பிரச்னைகள் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலும் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இருவரும் மாலை 4.30 மணியளவில் ஒட்டனந்தல் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இரு தரப்பினரிடையே விசாரித்து அறிவுரை கூறி சென்றனர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபர்கள் மீதும் வழக்கு பதியும்படி, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையை முடுக்கிவிட்டுள்ள காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு