Published:Updated:

தண்ணீர் விநியோகத்திலும் சாதிப் பாகுபாடு! - கண்ணீர் சிந்தும் காயம்பட்டி மக்கள்

செ.சல்மான் பாரிஸ்

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்வதில் கூட அதிகாரிகள் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக காயம்பட்டி கிராம மக்கள் புகார் எழுப்பியுள்ளார்கள்.

Water Tank
Water Tank

மதுரை அருகே புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காயம்பட்டி கிராமத்தில்தான் இக்கொடுமை பல வருடங்களாக நடந்து வருவதாக மக்கள் புகார் கூறுகிறார்கள். இதுதொடர்பாக, மதுரை கலெக்டரிடம் மீண்டும் அவர்கள் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

village people
village people

இதுபற்றி கிராம மக்கள் பேசும்போது, ``எங்கள் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதில் ஆதி திராவிடர் இன மக்கள் 90 குடும்பத்தினர் உள்ளோம். பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி அமைத்தார்கள். அதில் எங்கள் பகுதிக்கும், சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இரண்டு வால்வுகள் அமைத்தார்கள்.

அதில் சாதி இந்துக்கள் செல்லும் பகுதிக்கு தண்ணீரை அப்பகுதி மக்களே திறந்துவிட்டுக் கொள்வார்கள். ஆனால், எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்கும் வால்வை மட்டும் பூட்டுப்போட்டு வைத்துள்ளார்கள். அவர்கள் நினைத்தால்தான் எங்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியும். அதிலும் அதிகமான மக்கள் வாழும் எங்கள் பகுதிக்குக் குறைந்த நேரமே தண்ணீர் திறந்து விடுவார்கள். இதனால் நாங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறோம். எங்கள் தெருவில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் பழுதாகி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையும் சரி செய்துதரவில்லை. சாதி இந்துக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் வால்வுக்கான சாவியை அவர்களிடம் கொடுத்ததுபோல எங்கள் பகுதி வால்வுக்கான சாவியை எங்களிடம் தர வேண்டும்.

Water Tank
Water Tank

மேலும், எங்கள் பகுதிக்கென்று தனியாக ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர்த் தொட்டி கட்டித்தர வேண்டும். நீண்டகாலமாக தண்ணீர் தருவதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இந்தப் புகாரை விசாரித்த மதுரை கலெக்டர், உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதில் முதற்கட்டமாக ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வால்வுக்குப் போடப்பட்ட பூட்டு அகற்றப்பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் கூறினார்கள்.