Published:Updated:

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு; 30 அடி உயரத்துக்கு வான் நோக்கிப் பீறிட்ட குடிநீர்

வீணான குடிநீர்

கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும் கூட்டுக் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பீய்ச்சியடித்து, சாலையில் ஓடியது.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு; 30 அடி உயரத்துக்கு வான் நோக்கிப் பீறிட்ட குடிநீர்

கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும் கூட்டுக் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பீய்ச்சியடித்து, சாலையில் ஓடியது.

Published:Updated:
வீணான குடிநீர்

கரூர் மாவட்டம் வழியாக ஓடும் காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கரூர் மாவட்டம் தவிர, அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் திருமாநிலையூர் என்ற இடத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு ராட்சதக் குழாய்கள் மூலம் மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.

வீணான குடிநீர்
வீணான குடிநீர்

இதற்கிடையில், கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள தரகம்பட்டி டு மணப்பாறை சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இரவு பகலாக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்றுவருன்றன. நேற்று தரகம்பட்டி கடைவீதி அருகேயுள்ள மணப்பாறை சாலையில் குடிநீர்க் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு சுமார் 30 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் காண அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 'அடிக்கடி இப்படி நடக்கிறது. வேறு பணிகள் செய்யும்போது, இங்குள்ள காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயை உடைத்துவிடுகிறார்கள். அதனால், எங்கப் பகுதியில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது' என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். குடிநீர் வீணாவதை உணர்த்துவதற்காக, இளைஞர் ஒருவர் அப்படிப் பீறிட்டு வான்நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீரில் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

சம்பவ இடத்தில் குழுமிய மக்கள்
சம்பவ இடத்தில் குழுமிய மக்கள்

இதற்கிடையில், கடவூர் வட்டாட்சியர் மூலம் குடிநீர் வடிகால் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் மின்மோட்டார்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தண்ணீர் வெளியேறியது. அதன் காரணமாக, குடிநீர் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்துக்குள் குடிநீர் புகுந்தது. இதனால், அங்கிருந்த மாணவர்கள் பள்ளியைவிட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதவிர, கரூர் தரகம்பட்டி மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்வதற்கு இரண்டு நாள்களுக்கு மேல் ஆகும் என்பதால், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்குச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், "தரகம்பட்டி டு மணப்பாறை சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புக்கு அப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரே காரணம்.

வீணாகிய குடிநீர்
வீணாகிய குடிநீர்

நவீன இயந்திரங்களைக்கொண்டு சாலைப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளும்போது, குடிநீர்க் குழாய்கள் பாதிக்கப்பட்டன. எனவே, குடிநீர்க் குழாய்கள் செல்லும் பகுதிகள் மற்றும் தொலைத் தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.