Published:Updated:

காவிரி நீர்:``உத்தரவிட்டால் போதாது; மேலாண்மை ஆணையம் நீரைப் பெற்றுத் தர வேண்டும்!"-டெல்டா விவசாயிகள்

காவிரி நீர்
காவிரி நீர்

விளைநிலங்களுக்கோ தண்ணீர் செல்லாததால் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றன. இந்தநிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு முதலமைச்சர் ஆணையத்துக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கர்நாடகா 40 டி.எம்.சி தண்ணீரை விடுவிக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுவது மட்டும் வேலையல்ல. தண்ணீரை பெற்றுத் தர முன்வர வேண்டும் என்று தமிழகக் காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர்
காவிரி நீர்

இது பற்றி பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம்.

"தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் குறுவைச் சாகுபடி செய்வதற்கு திட்டமிடப்பட்டு நாற்றுவிடும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன. தண்ணீரின்றி நடவு பணி மேற்கொள்ள முடியாமலும், நேரடியாக விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் கருகிவருவதைப் பார்த்தும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக மேட்டூரிலிருந்து 18,000  கனஅடி தண்ணீரை விடுவிக்க வேண்டும். இதுவரையிலும் 10,000 கனஅடி வீதம் விடுவிப்பதால் ஆறுகளில் மட்டும் கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கிறதே தவிர, எந்த ஒரு கிராமத்ததுக்கோ, விளைநிலங்களுக்கோ தண்ணீர் செல்லாததால், பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. இந்தநிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு முதலமைச்சர் ஆணையத்துக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி நீர்
காவிரி நீர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று 25.06.2021 நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40 டி.எம்.சி தமிழகத்துக்கான தண்ணீரை உடனடியாக கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதோடு, ஆணையத்தின் வேலை முடிந்ததாக நினைக்கக் கூடாது. உடனடியாக கண்காணிப்புக்குழு நேரடியாக கர்நாடகாவில் பார்வையிட்டு தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைப்  பெற்றுத் தருவதை ஆணையத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், கடந்த ஆண்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் ஏற்கவில்லை. காலம் கடந்து உபரிநீரைத் திறந்து ஆணைய உத்தரவை நிறைவேற்றியதாகக் கணக்கு காட்டி இருக்கிறதே தவிர, உரிய காலத்தில் தண்ணீர் வழங்கவில்லை. எனவே, ஆணையம் விழிப்போடு செயல்பட்டு தண்ணீரைப் பெற்றுக் கொடுத்தால்தான் இந்த ஆண்டு குறுவைச் சாகுபடியும், சம்பா சாகுபடியும் தமிழகத்தில் மேற்கொள்ள முடியும். இல்லையேல் விவசாயம் அழிந்து போகும் என  எச்சரிக்கிறேன் "என்றார்.

அடுத்த கட்டுரைக்கு