''சேலம் மக்களின் மிக நீண்ட நாள் கனவு திட்டமாக காவிரி உபரி நீர் இருந்து வந்தது. இன்று இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருப்பது சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது''.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை நீரேற்று முறையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா ஆற்றின் வழியாக 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (26.2.2021) மலர் தூவி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி சேலம் திப்பம்பட்டியில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணை தலைவர் பொன்னையன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகம், சேலம் கலெக்டர் ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் பாசன வசதி பெறுவதில்லை. மழைக் காலத்தில் மேட்டூர் அணை நிரம்பி அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய பிறகு உபரி நீர் மேட்டூர் 16 கண்மாயின் வழியாக திறந்து விடப்பட்டு கடலில் போய் கலக்கிறது. ஆனால் மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் மேட்டூர் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா ஆற்றின் வழியாக மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளை நிரப்ப வேண்டும். என்பது சேலம் மக்களின் மிக நீண்ட நாள் கனவு திட்டமாக இருந்து வந்தது. இன்று இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருப்பது சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு 565 கோடி மதிப்பீட்டில் காவிரி உபரி நீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதையடுத்து நீரேற்று முறையில் மேட்டூர் அருகே திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம் மற்றும் வெள்ளாளபுரம், கன்னந்தேரி ஏரிகளில் துணை நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து வெள்ளாளபுரம் ஏரியில் உள்ள துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி ஏரியில் உள்ள துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றிற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதோடு சரபங்கா ஆற்றில் கலக்கிறது. சரபங்கா ஆற்றின் வழித்தடத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி மீண்டும் காவிரி ஆற்றிலேயே இணைகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 4,240 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதோடு 48 கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு திட்டம் சிறப்பானதாக திகழ்கிறது. இதன் மூலம் இங்குள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறுவதால் பொருளாதார மேம்பாடு அடையும். எனவே சேலம் மாவட்ட மக்களுக்கு இந்த திட்டம் மிக முக்கியமனதாக கருதப்படுகிறது.