Published:Updated:

`19 நாள் காவிரி நீர் கிடைக்காது!’ -வேலூர், திருப்பத்தூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்கள்

கதவணை
கதவணை ( எஸ். தேவராஜன் )

``காவிரி நீர் தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் கிடைக்கும் நீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில், நாளை முதல் ஜூன் 9-ம் தேதி வரை மொத்தம் 19 நாள்களுக்குக் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் தடைசெய்யப்படுவதாக இரண்டு மாவட்ட கலெக்டர்களும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் ஆகியோர் கூறியிருப்பதாவது:- ``மேட்டூர்-செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (22-ம் தேதி) முதல் ஜூன் 9-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக 19 நாள்களுக்குக் காவிரி குடிநீரை முழுமையாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்
திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள்

எனவே, உள்ளூரில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலமாகப் பெறப்படும் குடிநீரைச் சிக்கனமாகவும் சேமித்து வைத்தும் பயன்படுத்துங்கள். இதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும்’’ என்று கூறியிருக்கிறார்கள். காவிரி குடிநீர் தடைசெய்யப்படுவதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளப்போவது வேலூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்கள்தான். ஏனெனில், அந்தத் திட்டம் மூலம் மாநகராட்சியின் 50 சதவிகித தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனிடையே, ரம்ஜான் பண்டிகை வருவதால் அந்த நேரத்தில் மட்டும் காவிரி குடிநீரைச் சீராக வழங்க வேண்டும் என்று அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ரம்ஜான் பண்டிகையை வரும் 25-ம் தேதி கொண்டாட உள்ளனர். வேலூர், பள்ளிகொண்டா, விஷாரம், ராணிப்பேட்டை, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்களில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்
தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்

அந்த நகர மக்களுக்குப் பண்டிகையையொட்டி, நான்கு நாள்களுக்குக் குடிநீர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்ட பராமரிப்புப் பணியிலிருந்து விலக்களித்து உதவிட என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை கலெக்டர்கள் பரிசீலனை செய்து நாளை முதல் 26-ம் தேதி வரை நான்கு நாள்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு