Published:Updated:

ஜல்சக்தி துறையோடு காவிரி மேலாண்மை ஆணையம் இணைப்பு... கைவிட்டுப்போகிறதா தமிழகத்தின் காவிரி உரிமை?

கல்லணை

கொரோனா தாக்குதலுக்குப் பயந்து நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ஒரு செயலை அரங்கேற்றியுள்ளது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு.

ஜல்சக்தி துறையோடு காவிரி மேலாண்மை ஆணையம் இணைப்பு... கைவிட்டுப்போகிறதா தமிழகத்தின் காவிரி உரிமை?

கொரோனா தாக்குதலுக்குப் பயந்து நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ஒரு செயலை அரங்கேற்றியுள்ளது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு.

Published:Updated:
கல்லணை
மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு, காவிரிநீர் ஒரு சொட்டுக் கூட வராது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அந்த மாபாதகத்தை செய்ய துணிந்தது.

காவிரி என்பது வெறும் நதியல்ல. தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம். தமிழக மக்களின் உயிர்நாடி. இதனை தடுத்து நிறுத்த துடிக்கிறது கர்நாடகம். சட்டப்படியும் மரபுரிமைப்படியும் கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு, நீண்டகாலமாகப் போராடிக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. தாயுள்ளத்தோடும் நடுநிலையோடும் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ, கர்நாடகாவோடு கைகோத்து, தமிழக மக்களை எட்டி உதைத்து, நெஞ்சில் ஏறி மிதிக்கிறது. கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், காவிரி டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நிலைகுலைந்து கிடந்தபோது, நாம் கொஞ்சமும் எதிர்பாராத, அந்த அதிர்ச்சி செய்தி வெளியானது. துயரத்தால் துவண்டு கிடக்கும் தமிழக மக்கள் மீது ஓர் மாபாதகத்தை நமது மத்திய அரசு நிகழ்த்துமா என அந்த செய்தியைத் தமிழக மக்களின் மனம் முதலில் நம்ப மறுத்தது. ஆனால், அது உண்மைதான் என உறுதியானபோது, இதயங்கள் ரணமாயின.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில், கர்நாடகம் சட்டவிரோதமாக அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு காவிரிநீர் ஒரு சொட்டுக்கூட வராது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அந்த மாபாதகத்தை செய்ய துணிந்தது. கஜா புயலினால் தமிழக மக்கள் துவண்டு கிடப்பதால், போராட்டக்களத்திற்கு வரமாட்டார்கள் என்ற கணக்கில்தான் அப்போது அந்த அனுமதியை அளித்தது. தற்போது, கரோனா தாக்குதலுக்கு பயந்து நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், ஒரு செயலை அரங்கேற்றியுள்ளது, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு.

காவிரி நிர்
காவிரி நிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஏற்கெனவே உள்ள விதி 33-க்குக் கீழ் 33A, B, C, D, E பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி 33C - கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், 33D - கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், 33E - காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் அன்றாட நிர்வாக விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஊரடங்கு நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்து, தமிழ்நாட்டிற்கு ஊறு விளைவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு விரோதமாக, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கைக்கு அடக்கமான சவளைப் பிள்ளையாக மாற்றியுள்ளது. இதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் கொந்தளிப்புகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். வருகிற மே 7-ம் தேதி வியாழன் அன்று மாலை... கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், உள்ள ஆண்கள் , பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும் அவரவர் வீட்டு வாசலில் குறிப்பிட்ட சமூக இடைவெளி விட்டு கையில் கண்டனப் பதாகைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தி, மத்திய அரசுக்கு நம்முடைய ஆதங்கத்தையும் கோரிக்கையையும் தெரிவிக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மிகுந்த ஆதங்கத்தோடு, ”உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தன்னதிகாரமுள்ள அமைப்பாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் கீழமை அலுவலகமாக, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மாற்றியுள்ளது. இந்த அநீதியை கண்டிக்க வேண்டிய தமிழ்நாடு அரசோ, இதை ஆதரித்திருப்பதோடு, இதனால் ஆபத்தில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது...”என்று தெரிவிக்கிறார்.

ஏற்கெனவே உள்ள விதி 7ஐ அடுத்து 7A சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 7A-யின்படி, இனிமேல் ஆறுகளின் தண்ணீர்ப் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு ஆகியவை சார்ந்த அதிகாரங்கள் மத்திய ஜல்சக்தி துறையின் அதிகாரத்தின் கீழ் வரும்.

மேலும், “தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ’தனித்தனியே செயல்பட்ட இரண்டு துறைகளை இணைத்து, கடந்த ஆண்டு ஜல்சக்தி (நீராற்றல்) அமைச்சகத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதற்கான விதிகளில் செய்துள்ள திருத்தங்கள்தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அதிகாரங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதுகுறித்து நடுவண் அரசு அதிகாரிகளைக் கேட்டு உறுதி செய்து கொண்டோம் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய ஜல்சக்தி துறையின் அன்றாட நிர்வாகப் பணி விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஏற்கெனவே உள்ள விதி 7ஐ அடுத்து 7A சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 7A-யின்படி, இனிமேல் ஆறுகளின் தண்ணீர்ப் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள், நீர் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு ஆகியவை சார்ந்த அதிகாரங்கள் மத்திய ஜல்சக்தி துறையின் அதிகாரத்தின் கீழ் வரும்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி முன்பு நடந்த போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி முன்பு நடந்த போராட்டம்

அடுத்து, ஏற்கெனவே உள்ள விதி 33-க்குக் கீழ் 33A, B, C, D, E பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி 33C - கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், 33D - கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், 33E - காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் அன்றாட நிர்வாக விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானதாகும். காரணம், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வரையறுத்தத் தன்னதிகார விதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று 16.2.2018 அன்று உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் செயல்பாடுகளில், மத்திய அரசின் நீர்வளத்துறை எந்த வகையிலும் தலையிட முடியாது என்ற நிலை இருந்தது. அதில் ஓட்டை போடுவதற்காகதான், நரேந்திர மோடி அரசு, தற்போது, பணி ஒதுக்கீட்டு விதியில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
பெ.மணியரசன், காவிரி உரிமை மீட்புக் குழு
பெ.மணியரசன்
பெ.மணியரசன்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் தீர்மானித்துச் செயல்படுத்துவார்கள். இதன் அன்றாடப் பணிகளைக் காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும் அதிகாரிகளும் செயல்படுத்துவார்கள். இவற்றின் கூட்டத்தைக் கூட்டுவது, நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது, முடிவுகளைச் செயல்படுத்துவது உள்ளிட்ட அதிகாரங்கள் இவ்விரு அமைப்புகளிடம் இருந்தன. அதன் செயல்பாடுகளில், மத்திய அரசின் நீர்வளத்துறை எந்த வகையிலும் தலையிட முடியாது என்ற நிலை இருந்தது. அதில் ஓட்டை போடுவதற்காகதான், நரேந்திர மோடி அரசு, தற்போது, பணி ஒதுக்கீட்டு விதியில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஓட்டைகளை அடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இவற்றை ஆதரித்துப் பக்கவாத்தியம் வாசிப்பது ஏன்?

இந்த விதித் திருத்தங்கள் தொடர்பாகத் தமிழக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி வெளிப்படையாக விளக்க அறிக்கை கொடுங்கள் என்றாவது மத்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கலாம் அல்லவா? இதையெல்லாம் விடுத்து, தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் வஞ்சகச் செயலுக்கு எடப்பாடியார் வாழ்த்துக் கூறுகிறார்.

பெ.மணியசரன்
பெ.மணியசரன்
இனி தமிழ்நாட்டு எதிர்ப்பைத் துச்சமாக ஒதுக்கிவிட்டு மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே நீர்வளத்துறை என்று செயல்பட்ட இன்றைய ஜல்சக்தி துறைதான், கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டப் பச்சைக் கொடி காட்டி அதனிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை வாங்கி வைத்துள்ளது. இதே நீர்வளத்துறையின் செயலாளர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் கூடும்போதெல்லாம், மேக்கேதாட்டு அணை கட்டுவது பற்றிய பொருளை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து வைத்து வருகிறார். இனி தமிழ்நாட்டு எதிர்ப்பைத் துச்சமாக ஒதுக்கிவிட்டு மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது. கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கிறது மோடி அரசு. அதற்குத் துணைபோய் துரோகம் இழைக்கிறது எடப்பாடி அரசு. மத்திய ஜல்சக்தி துறையின் திருத்த விதிகளைக் கைவிடச் செய்ய ஊரடங்கைக் கடைபிடித்துக் கொண்டே போராடுவோம். இதற்கான அறப்போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்கிறார்.

விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்னைகளும் நெருக்கடிகளும் உள்ளன. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜல்சக்தி துறையின் கீழ், காவிரி ஆணையத்தை இணைப்பது துளியும் நியாயமில்லை.
சுந்தர விமல்நாதன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், சுவாமிமலை சுந்தர விமல்நாதனும் கொந்தளிப்பாகப் பேசுகிறார்.

’’காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, மத்திய அரசு நீண்டகாலம் எடுத்துக்கொண்டது. தனி அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகதானே இது உருவாக்கப்பட்டது. தற்போது இதை, மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைக்க வேண்டிய அவசியம்தான் என்ன? எந்த ஒரு உள்நோக்கமும் இல்லையென்றால், இதற்கான காரணத்தை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே... விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்னைகளும் நெருக்கடிகளும் உள்ளன. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், ஜல்சக்தி துறையின் கீழ், காவிரி ஆணையத்தை இணைப்பதிலும், இதில் திருத்தங்கள் செய்வதிலும் மத்திய அரசு ஆர்வம் காட்டிக் கொண்டிப்பதில் துளியும் நியாயமில்லை” என்கிறார் அவர்.

மத்திய அரசு எப்பொழுதுமே தமிழக மக்களுக்கு, குறிப்பாக, இங்குள்ள பாசன விவசாயிகளுக்கு பாதகமாகவே நடந்து கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரங்களும் இதற்கு சாட்சி.
அ.வீரப்பன், தலைமை பொறியாளர் (ஓய்வு), தமிழ்நாடு பொதுப்பணித்துறை

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன், ‘’இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்” என்கிறார். மத்திய அரசு எப்பொழுதுமே தமிழக மக்களுக்கு, குறிப்பாக, இங்குள்ள பாசன விவசாயிகளுக்கு பாதகமாகவே நடந்துகொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரங்களும் இதற்கு சாட்சி. காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும் கூட, மேலாண்மை ஆணையம் அமைக்க மறுத்து வந்தது. நம் மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும்கூட அலட்சியம் செய்தது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட நீண்ட இழுத்தடிப்புக்கு பிறகே இது அமைக்கப்பட்டது.

வீரப்பன்
வீரப்பன்
மத்திய அரசின் தற்போதைய சூழ்ச்சி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆனாலும், நிரந்தர தலைவர் நியமிக்கவில்லை. இதற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் இல்லையென்றாலும்கூட இங்காவது நமது ஆதங்கத்தைப் பதிவு செய்தோம். அழுத்தம் கொடுத்தோம். தற்போது இதற்கும் ஆபத்து வந்துவிட்டது. மத்திய ஜல்சக்தி துறை கண்டிப்பாக கர்நாடகாவிற்கு சாதகமாகத்தான் நடந்துகொள்ளும். ஏராளமான உதாரணங்கள் உள்ளன. காவிரியில் தண்ணீர் கொண்டு வர முடியாத தமிழக அரசோ, கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் கொண்டு வருவதாக திசைத்திருப்புகிறது. மத்திய அரசின் தற்போதைய சூழ்ச்சி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் வருமா என்பதே இனி சந்தேகம்தான்” என்றார்.

காவிரி
காவிரி

எத்தனை எத்தனை போராட்டங்கள்... காவிரிக்காகப் போராடி போராடி தமிழ்நாட்டு மக்கள் களைத்துப் போயிருந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் அழுத்தத்தால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்பாடா 50 ஆண்டுக்கால போராட்டத்திற்கு இப்பொழுதாவது முடிவு வந்ததே... விடிவு பிறந்ததே எனத் தமிழக மக்கள் நிம்மதி அடைந்தார்கள். ஆனால், மத்திய அரசு தற்போது காவிரி பிரச்னையை மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மக்கள் விழிக்காவிட்டால் காவிரி உரிமை நம் கைவிட்டுபோய்விடும் என்பதே எதார்த்தம்.