Published:Updated:

`எனக்குள் ஐயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்தது!' - எதற்காகக் கடிதம் எழுதினார் டி.ஜி.பி ஜாபர்சேட்?

சி.பி.சி.ஐ.டி-யின் டிஜிபியான எம்.எஸ்.ஜாபர்சேட், `உங்களுடன் ஓராண்டு' என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் பல தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி-யின் டிஜிபியான எம்.எஸ்.ஜாபர்சேட் ஐ.பி.எஸ், கடந்த 9-ம் தேதி `உங்களுடன் ஓராண்டு' என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ``நான் உங்கள் தலைவனாக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. என்னுடைய 34 ஆண்டு காவல் பணியில் மாநிலத்தின் பல பரிவுகளில், பல பொறுப்புகளில் பணி மேற்கொண்டுள்ளேன். சட்டம் ஒழுங்கு, பயிற்சி, ஆயுதப்படை, உளவுத்துறை போன்ற பல பிரிவுகளுக்கு நான் தலைவனாக பொறுப்பில் இருந்துள்ள போதிலும் அத்துறைகளில் எல்லாம் காவல் கண்காணிப்பாளராகவோ துணைத் தலைவராகவோ பதவி வகித்த பின்பே தலைமை பொறுப்பை ஏற்றுள்ளேன்.

ஜாபர்சேட் கடிதம்
ஜாபர்சேட் கடிதம்

ஆனால், குற்றப் புலனாய்வுத் துறையில் (சி.பி.சி.ஐ.டி) மட்டும் நான் இதுவரை பணியாற்றியதில்லை. ஆகவே, நேரடியாக இத்துறையின் தலைமை பொறுப்புக்கு வந்தபோது எனக்குள் ஒரு சிறு ஐயமும் தயக்கமும் இருக்கத்தான் செய்தது. ஆனால், உங்களின் சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் நேர்த்தியான நேர்மையையும் கடின உழைப்பையும் கண்டபோதும் எனக்கு நீங்கள் அளித்த ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் ஆதரவையும் உணர்ந்த போதும், என் தயக்கம் தானாக விலகியது. மனதில் ஒரு தெம்பு பிறந்தது. உங்களுடன் ஒன்றாக பணி செய்யத் தொடங்கிய இந்த ஓராண்டில் செயற்கரிய செயல்கள் பல செய்தும் சாதனை பல படைத்தும் நம் காவல் துறைத் தலைவர் நண்பர் தி.சங்கர் என்னிடம் கூறியதுபோல `சிலிர்த்து எழுந்து நிற்கிறது இன்று சி.பி.சி.ஐ.டி.'

இந்த ஓராண்டில் எத்தனையோ சாவல்களையும் சோதனைகளையும் தாண்டி இந்தப் பெருமையை இத்துறை அடைந்துள்ளது என்பது உங்களுக்கும் தெரியும். நீட் தேர்வு முறைகேடு தொடங்கி, டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்குகளிலும் மற்றும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் நாம் மேற்கொண்ட சீரான புலனாய்வும் அவ்வழக்குகளைக் கையாண்ட விதமும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரும் நல்லுணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

ஜாபர்சேட் ஐபிஎஸ்
ஜாபர்சேட் ஐபிஎஸ்

பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த பல வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதும் 8 ஆண்டுகளுக்கு மேல் பிடிபடாமல் இருந்த பல குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்ததும் தொய்வில் இருந்த பல வழக்குகளுக்கு தூசு தட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பதுங்கியிருந்த பல குற்றவாளிகளைப் தேடிப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியதும் இந்த ஓராண்டில் நீங்கள் சாதித்தவைகளில் சில. இந்த நேர்த்தியான பணியினால் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் தமிழக அரசின் நல்லுணர்வையும் மதிப்பையும் நீதித்துறையின் நம்பிக்கையும் இத்துறை பெற்றுள்ளது என்பது வெட்ட வெளிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்முடைய பணி சிறக்க நமக்கு வேண்டிய எத்தனையோ உபகரணங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இந்த ஓராண்டில் இந்த நல்லுணர்வின் பயனாக தமிழக அரசு நமக்கு வழங்கியுள்ளது. மேலும், உங்களை உத்வேகப்படுத்துவதற்காக உங்கள் மனம் மற்றும் உடல் நலம் பேணுவதற்காக `நிறைவாழ்வு பயிற்சி' , `யோகாசன பயிற்சி' மற்றும் துறை சார்ந்த பயிற்சிகள் பல இந்த ஓராண்டில் உங்களுக்கு வழங்கப்பட்டு இத்துறையின் பணித்திறன் கூராக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு

மேலும், வழக்கு விசாரணைக்குத் தேவையான பல நவீன உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிள் ஆகியவற்றுக்கான கருத்துருக்கள் அரசின் கனிவான பார்வைக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் இருந்து வருகிறது. இவற்றில் மிக முக்கியமாக குற்றப்புலனாய்வுத் துறைக்கான சிறப்பு ஊதியமாக 5 சதவிகிதம் வழங்கும் கருத்துருவும் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் கனிவான பரிசீலனையில் இருந்து வருகிறது. இது உங்களுக்கு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

இத்தனை வசதிகளையும் வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசின் எதிர்பார்ப்புக்கு இணங்க வரும் ஆண்டிலும் செயல்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

பொதுமக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கும் நீதிமன்றங்களின் நம்பிக்கைக்கும் திருப்திக்கும் அரசின் நல்லெண்ணத்துக்கும் ஏற்ப இனியும் தொடர்ந்து தொய்வின்றி முழு மூச்சுடனும் அர்ப்பணிப்புடனும் பணி செய்ய இந்நாளில் உறுதி ஏற்று வருகின்ற ஆண்டை நோக்கி வீறு நடை போடுவோம்.

ஜாபர்சேட் கடிதம்
ஜாபர்சேட் கடிதம்

உங்களுடன் பணி செய்த இந்த ஓராண்டு எனக்கு மன நிறைவையும் சந்தோஷத்தையும் முழு திருப்தியையும் அளித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திய வியர்வைக்கும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இருகரம் கூப்பி வணங்கி நன்றி செலுத்துகிறேன். இதே அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் மேலும் நாம் பணி தொடர்வோம் என்று உங்களின் சார்பாக உறுதி பூணுகிறேன்.

விருப்பு வெறுப்பற்ற நேர்மையான கூர்மையான புலனாய்வே குறிக்கோளாக நம் பயணத்தைத் தொடர்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் குறித்து ஐ.பி.எஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சி.பி.சி.ஐ.டி-யில் டி.ஜி.பி-யாக இருக்கும் ஜாபர்சேட்டுக்கும் தமிழக அரசுக்கும் சுமுகமான நட்புறவு இருந்துவருகிறது. அதனால் தமிழக காவல் துறையில் ஜாபர்சேட்டுக்கு விரைவில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்னோட்டமே இந்தக் கடிதம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு