Published:Updated:

`டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் நானா?' -சிபிசிஐடி போலீஸைக் கொதிக்கவைத்த முகப்பேர் ஜெயக்குமார்

நீதிமன்றத்தில் ஜெயக்குமார்
நீதிமன்றத்தில் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்று அரசுப் பணியிலிருக்கும் 796 பேரின் பட்டியல் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் உள்ளது. அதில் போலீஸிடம் சிக்காதவர்களில் பலர் நீண்டநாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 32 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில், டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கவேல், அரசு ஊழியர்கள் கார்த்தி, சுதா, சுதாதேவி மற்றும் சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிய சித்தாண்டி, பூபதி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய முத்துக்குமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார்
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார்

அரசு ஊழியர்கள், காவலர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடிவந்த சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து, புழல் சிறையில் அவரை அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும், ` டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதனால் அவரை அங்கு ஆஜர்படுத்தும்படி' மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஜெயக்குமார், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். சைதாப்பேட்டை, எழும்பூர் நீதிமன்றங்களில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் முகத்தை வெள்ளைத் துணியால் மூடியிருந்தார். அவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்குச் சுற்றிலும் போலீஸார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர்.

`எதற்காகச் சரண் அடைகிறேன்?' என மனு ஒன்றையும் ஜெயக்குமார் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக என்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடிவருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் பெயரைக் கெடுக்கும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எழும்பூர்  நீதிமன்றத்துக்கு வந்த ஜெயக்குமார்
எழும்பூர் நீதிமன்றத்துக்கு வந்த ஜெயக்குமார்

ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், ``டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் சிக்கியவர்கள் அளித்த தகவலின்படி சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரைத் தேடிவந்தோம். அவரின் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் நீதிமன்றத்தில் உத்தரவைப் பெற்று வீட்டில் சோதனை நடத்தினோம். அந்தச் சோதனையிலும் வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் கிடைத்தன.

ஜெயக்குமாரும் அவரின் குடும்பத்தினரும் தலைமறைவாகிவிட்டதால்தான் பத்திரிகைகளில் தகவல் தெரிவித்தோம். அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்பிறகும் ஜெயக்குமார் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. அவரின் நடமாட்டம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருப்பதாக எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்றோம். ஜெயக்குமார் மற்றும் அவரின் மனைவியின் வங்கிக் கணக்குகளை முடக்கினோம். போலீஸாரின் நெருக்கடியை அடுத்து அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி
ஜெயக்குமார்
ஜெயக்குமார்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம். போலீஸ் காவலில் எடுத்த பிறகு ஜெயக்குமாரிடம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்கென தனி டீம் தயாராக உள்ளது" என்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்று அரசுப் பணியிலிருக்கும் 796 பேரின் பட்டியல் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் உள்ளது. அதில் போலீஸிடம் சிக்காதவர்களில் பலர் நீண்டநாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். அவர்களில், சிலர் முன்ஜாமீன் கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், `ஜெயக்குமார் தரப்போ, இப்போதைக்கு முன்ஜாமீன் கேட்கும் மனநிலையில் இல்லை' என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்கவும் ஜெயக்குமார் தரப்பு தயாராகி வருகிறது.

பின் செல்ல