Published:Updated:

`நான் புரோக்கர்தான்; எனக்கு மேல் சிலர் உள்ளனர்!' -டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய சித்தாண்டி

சித்தாண்டி
சித்தாண்டி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், இதுவரை 21 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னைக் காவல்துறையில் பணியாற்றிவரும் சித்தாண்டி இன்று ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பான தகவல்கள், புற்றீசல்போல வந்தவண்ணம் உள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக குரூப் 4 தேர்வில் 16 பேரும் குரூப் 2-ஏ தேர்வில் 5 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளுக்கு மூளையாக சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், சென்னை போலீஸ் எஸ்.ஐ. சித்தாண்டி ஆகியோரைப் போலீஸார் தேடிவந்தனர். தற்போது சித்தாண்டியை ராமநாதபுரத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர். `ஜெயக்குமார் குறித்துத் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும்' என சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.

குரூப் 2ஏ தரவரிசைப் பட்டியல்
குரூப் 2ஏ தரவரிசைப் பட்டியல்

நேற்று (3.2.2020) சிபிசிஐடி போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,` 2017-ல் நடந்த குரூப் 2ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மார்க் எடுத்ததாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் புகார் கொடுத்தது. அதன்பேரில் 31.1.2020 அன்று சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறது. இதுவரை குரூப் 2-ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 5 பேரும் குரூப் 4 தேர்வில் 16 பேரும் என 21 பேரைக் கைது செய்துள்ளோம்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த வடிவு (44), குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 271.5 மதிப்பெண்கள் பெற்று 29-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக அயல் பணியில் பணியாற்றிவருகிறார்.

பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்த தென்கரையைச் சேர்ந்த ஞானசம்பந்தம் (30) குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 256.5 மதிப்பெண்கள் பெற்று 56-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை அஞ்சல், வெள்ளிங்கப்பட்டறையைச் சேர்ந்த ஆனந்தன் (32), குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு செய்து 277.5 மதிப்பெண்கள் பெற்று 19-வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை செங்குன்றத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

சித்தாண்டியின் தம்பி வேல்முருகன்
சித்தாண்டியின் தம்பி வேல்முருகன்

இவர்கள் 3 பேரும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் ரூ.12,50,500, ரூ.15,00,000, ரூ.13,00,000 எனக் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா மேற்கு விஜயபதியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் (35) என்பவர் சென்னை எழிலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் மனைவி மகாலட்சுமி (27) என்பவருக்காக இடைத்தரகராக செயல்பட்ட சித்தாண்டி மூலம் 8,00,000 ரூபாயை ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடு செய்து 276 மதிப்பெண்களைப் பெற்று 24-வது இடத்தில் தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் இரவு பகல் பாராமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள், ஊழியர்கள் சிலர் தப்பிவருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அலுவலர் ஒருவர் நம்மிடம், ``குரூப் 4, குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்ததால்தான் இந்தளவுக்கு உண்மைகள் வெளியாகியுள்ளன. அதிலும் ஊழியர்கள், உதவியாளர்கள் மட்டத்திலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 4, குரூப் 2 தேர்வு ஆகிய தேர்வுகளின் முறைகேட்டின் மையமாக ராமேஸ்வரம் தேர்வு மையங்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடிதம்
கடிதம்

அதற்கான ஆதாரங்களும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே, சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கம் மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்று அரசு அலுவலகங்களில் பணியாற்றியவர்கள், புரோக்கர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் துணையில்லாமல் ஊழியர்கள் மட்டும் துணிச்சலாக முறைகேட்டில் ஈடுபட்டார்களா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசியல் பின்னணி இல்லாமல் இந்தளவுக்கு முறைகேடு நடக்க வாய்ப்புகள் குறைவு. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யார், யார் என்ற தகவல்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு ஏனோ தெரியவில்லை.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் முறைகேடு என்பது இது முதல் முறையல்ல. குரூப் 4, குரூப் 2-ஏ தேர்வுகளுக்கு முன்பே குரூப் 1 தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியவர்களைப் பணியிலிருந்து நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு காரணமாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அரசுப் பணியில் உயர்பதவிகளில் இருந்துவருகின்றனர். டிஎ.ன்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த சமயங்களில் அதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை தேவைப்பட்டிருக்காது.

`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்
சித்தாண்டி
சித்தாண்டி

டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் முக்கிய அதிகாரி ஒருவர், வேறுமாநிலத்தில் பணியாற்றியவர். அவரை டி.என்.பி.எஸ்.சி-யில் பணியமர்த்திய பின்னணியில் சிலர் உள்ளனர். ஆனால், அந்த அதிகாரியிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. அதைப்போல சித்தாண்டி, ஜெயக்குமார் ஆகியோருடன் தொடர்புடைய டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. அண்ணாநகரில் உள்ள அமைச்சர் ஒருவரின் அலுவலகத்துக்கு ஜெயக்குமார் அடிக்கடி சென்றுவந்த சிசிடிவி காட்சிகள் இருந்தும் இதுதொடர்பாக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை" என்றார்.

இதற்கிடையில் சித்தாண்டியைப் பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவருக்கும் டி.என்.பி.எஸ்.சி-க்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்துவருகின்றனர்.

அப்போது அவர், `நான் ஒரு புரோக்கர்தான், எனக்கு மேல் சிலர் உள்ளனர்' என்று கூறியதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சித்தாண்டியின் தம்பியும் அரசு ஊழியரான வேல்முருகன் (குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்) மூலம்தான் அவர் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சிபிசிஐடி போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. விரைவில் சித்தாண்டிக்கும் டி.என்.பி.எஸ்.சி-க்கும் உள்ள தொடர்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. `ஜெயக்குமார் பதுங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார்' என்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு