Published:Updated:

சாத்தான்குளம்: `நடந்ததை பயப்படாமச் சொல்லுங்கம்மா!’ - ஜெயராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை

"எதுவா இருந்தாலும் நடந்ததை பயப்படாமச் சொல்லுங்கம்மா" என சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிப் பேசினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து துவக்கியுள்ளது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு 5வது நாளாக விசாரணையை நடத்தி வருகிறது. நீதிபதியின் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸார் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிபதி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவலர் மகாராஜன் என்பவர் அநாகரிகமான வார்த்தைகளாலும் ஒருமையிலும் மாஜிஸ்திரேட்டிடம் பேசியதாகப் புகார் எழுந்தது. அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி ஏ.எஸ்.பி-யான குமார், டி.எஸ்.பி-யான பிரதாபன் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், தூத்துக்குடி எஸ்.பி அருண்பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியின் புதிய எஸ்.பி-யாக கடலூர் மாவட்ட எஸ்.பி-யாகப் பணிபுரிந்து வந்த ஜெயக்குமார் நியமிக்கப்பட்ட அவர், இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வழக்கு விசாரணையை தமிழகஅரசு, மதுரை உயர் நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாத்தான்குளத்தில் விசாரணையைத் துவக்கியது.

சி.பி.சி.ஐ.டி, ஐ.ஜி சங்கர், எஸ்.பி விஜயகுமார், அனில்குமார் உட்பட மூன்று டி.எஸ்.பி-க்கள், 10 ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர். 12 தனித்தனிக் குழுக்களாக இப்போலீஸார் பிரிந்து சாத்தான்குளம் காவல்நிலையம், சாத்தான்குளம், கோவில்பட்டி மருத்துவமனை, கோவில்பட்டி கிளைச்சிறை, சாத்தான்குளம் பஜார், வியாபாரிகள், பரிசோதனை செய்த, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில், பஜாரில் உள்ள ஜெயராஜின் செல்போன் கடை அருகிலுள்ள எலெக்ட்ரிகல்ஸ் கடையில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார், அரசரடி பிள்ளையார்கோயில் தெருவிலுள்ள ஜெயராஜ் வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மூன்று மகள்கள் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி

``உங்க கணவர் ஜெயராஜ், மகனுக்கு நடந்ததை பயப்படாமச் சொல்லுங்க" என போலீஸார் முதலிலேயே தைரியம் கொடுத்ததும், முதலில் செல்வராணி பேசினார். அன்று இரவு கணவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றது, அப்பாவைத் தேடி மகன் பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேஷன் சென்றது முதல் மறுநாள் காலை வரை நடந்த சம்பவம் வரை கண்ணீருடன் கூறினார். மூத்த மகள் பெர்சி, "போலீஸாரின் முரணான எப்.ஐ.ஆர் பதிவு, பிரேதப் பரிசோதனைக்கு முன்பான இருவரது உடல்களில் தென்பட்ட காயங்களின் தன்மை, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இரவில், இருவரது உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு இரண்டு மருமகன்களையும் போலீஸார் மிரட்டியது குறித்து விளக்கியுள்ளார். இது தவிர குடும்பத்தினரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி விசாரணை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர், ஜெயராஜின் இல்லத்திற்குச் சென்று மனைவி, மகள்களிடம் , ``உங்க குடும்பத்துல உயிரிழந்த 2 பேர் உயிரிழப்பு குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்காக எடுத்திருக்கோம்மா. நல்லமுறையில் விசாரணையில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கம்மா. கவலைப்படாதீங்க" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி சங்கர், ``இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக 12 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. விசாரணை நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. விசாரணையைப் பொறுத்து எப்.ஐ.ஆரில் மாற்றம் வரலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு