Published:Updated:

`தம்பிக்கு 3-வது இடம்; மனைவிக்கு 5-வது இடம்!' -டிஎன்பிஎஸ்சி மோசடியில் திகைக்கவைத்த சென்னை எஸ்.ஐ.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

சென்னையில் காவல்துறையில் பணியாற்றுபவரின் குடும்பத்தினர் டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸில் கைதாகும் நபர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளுக்கெல்லாம் மூளையாக சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் இருந்ததாகச் சொல்லும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், தலா 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்த நிலையில், குரூப் 4 தேர்வு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு நடந்த குரூப் 2ஏ தேர்வு, குரூப் 1 தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. குரூப் 4 தேர்வில் கைதான அரசு ஊழியர் திருக்குமரன், குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகின்றனர்.

அதுதொடர்பான விசாரணை நடந்துவருகிறது. போலீஸாரின் விசாரணையில் புதிய தகவலாகக் காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் எஸ்.ஐ ஒருவரின் குடும்பத்தினர் டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், ``சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் எஸ்.ஐயாகப் பணியாற்றுகிறார். அந்தக் காவலரின் மனைவி, குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். காவலரின் தம்பி குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே தேர்வில் காவலரின் தம்பி மனைவி தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் காவலரின் இன்னொரு தம்பி தரவரிசைப் பட்டியலில் 10 இடத்துக்குள் வந்துள்ளார். குரூப் 2 தேர்வு, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்ததாகத் தகவல் கிடைத்ததும் அதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். அந்த எஸ்.ஐ, குடும்பத்தினரைத் தவிர்த்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் வேலை வாங்கித் தரும் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டுவந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

`பாட்டிக்குத் திதி கொடுக்க வந்தோம்!'- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மோசடி விசாரணையில் மிரண்ட அதிகாரிகள்

சம்பந்தப்பட்ட காவலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காவலரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், அந்தக் காவலருடன் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதையும் ரகசியமாக கண்காணித்துவருகிறோம்.

அந்த எஸ்.ஐ, குரூப் 2ஏ தேர்வுக்கு 13 லட்சம் ரூபாயும் குரூப் 4 தேர்வுக்கு 9 லட்சம் ரூபாயும் வசூலித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது. எஸ்.ஐ-க்கு உதவியாக இருந்தவர்கள் யார், யார் என்று விசாரணை நடந்துவருகிறது. விரைவில் அந்த எஸ்.ஐ மற்றும் அவர் மூலம் வேலைக்குச் சேர்ந்தவர்கள் அனைவரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

தரவரிசைப் பட்டியல்
தரவரிசைப் பட்டியல்

இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ள ஊழியர்களில் சிலர் தொடர் விடுமுறையில் உள்ளனர். அவர்கள் எதற்காக விடுமுறை எடுத்துள்ளார்கள் என்றும் விசாரணை நடந்துவருகிறது. கைது செய்யப்பட்ட டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தனுக்கு வேண்டப்பட்ட ஒரு அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்துவருகின்றனர். அவர்தான் ஓம்காந்தனுக்கு ராமநாதபுரம் மாவட்ட விடைத்தாள்களை சென்னைக்குக் கொண்டு வரும் பணியை ஒதுக்குவதற்கு சிபாரிசு செய்துள்ளார். விரைவில் அந்த அதிகாரியும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு செல்வதால் அந்தத் தேர்வை ரத்து செய்யவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

``டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளின் பின்னணியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலரின் தலையீடு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான தகவல், மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் மேலிடத்தில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை" என்றார் சி.பி.சி.ஐ.டி-யின் உயரதிகாரி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு