Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அ.தி.மு.க பிரமுகர் உட்பட 3 பேர் கைது! - அதிரடிகாட்டும் சி.பி.ஐ

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பேரை சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
இன்ஸ்டாகிராம் பழக்கம், தனிமையில் பேச்சு... பொள்ளாச்சி இளைஞர் கொலையில் நடந்தது என்ன?

சமீபத்தில் இதன் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கின்றனர் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுவந்தது.

இந்தநிலையில், நேற்று மாலை இந்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அதன்படி ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால் (29), வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹேரேன் பால் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோல, பாபு என்கிற பைக் பாபு அடிதடி வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்தவர். கைதுசெய்யப்பட்டிருக்கும் மற்றொரு நபரான அருளானந்தம் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவருகிறார். இவர், பொள்ளாச்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.

அருளானந்தத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்திருக்கிறது. அதில் அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அருளானந்தம் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அருளானந்தத்தை நேற்று கட்சி அலுவலகத்தில்வைத்து சி.பி.ஐ கைதுசெய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால், பொள்ளாச்சியில் அ.தி.மு.க-வினர் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட மூவரும் சற்று நேரத்தில், மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கைதுசெய்யப்பட்டிருக்கும் அருளானந்தத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு