Published:Updated:

`உண்மை குற்றவாளிகள் சிக்க சிபிஐ விசாரணை வேண்டும்!’- டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் வலுக்கும் கோரிக்கை

சி.பி.ஐ
சி.பி.ஐ

டி.என்.பி.எஸ்.சி தொடர்பான சர்ச்சையில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்திய குருப்-4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளும் இடைத்தரகர்களும் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். இன்னும் பெருமளவில் பலர் சிக்குவார்கள் என்றே கூறப்படுகிறது.

tnpsc
tnpsc

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் என்பவரை கண்டுபிடிக்க உதவும் நபர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என சி.பி.ஐ.டி காவல்துறை அறிவித்து விசாரித்து வரும் நிலையில், இந்த மிகப்பெரும் சர்ச்சையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து கிரானைட் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வரும் வழக்கறிஞர் எட்டிமங்கலம் ஸ்டாலின்...,' டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சர்ச்சைகள் நிலவுகின்றன. 2010-ல் குருப்-1 தேர்வு முறைகேடுகள் நடந்தது ஒப்புக்கொள்ளப்பட்டது. 2012-ல் குருப்-4 தேர்வு வினாத்தாள்கள் கொல்கத்தாவில் அச்சடிக்கப்பட்டு வெளியானது வழக்கானது. ஜெயலலிதா பதவி ஏற்ற பின் பலரது வீடுகளில் சோதனையும் நடைபெற்றது. 6 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எட்டிமங்கலம் ஸ்டாலின்
எட்டிமங்கலம் ஸ்டாலின்

இப்படி பல சர்ச்சை வலைகள் டி.என்.பி.எஸ்.சி மீது விழுந்தது. இந்த நிலையில், 2020 மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டுப் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் அரசியல் பிரமுகர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் என பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள். எனவே, சி.பி.ஐ.டி போலீஸ் விசாரணை செய்வதைவிட சி.பி.ஐ விசாரணை செய்வதே சரியாக இருக்கும்.

அப்போதுதான் உண்மையான பல குற்றவாளிகள் இதில் சிக்குவார்கள். இல்லையென்றால், பரபரப்பாக பேசப்பட்டு பின் முறையான நடவடிக்கைகள் இல்லாமல் போய்விடும். உயர்நீதிமன்றத்தில் சில முக்கியத் தகவல்களுடன் என்னுடைய கோணத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளேன். அதில் பல முறைகேடுகள் நிரூபணமாகும்' என்றார்.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்

இந்த முறைகேடு தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு