Published:Updated:

`சந்தேகம் இருந்தால் மருந்தை சாப்பிட்டுப் பாருங்கள்' -சவால்விட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

'என் மருந்து குணப்படுத்தவில்லை என்றால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று அரசுக்கு சவால்விடுக்கும் வகையில் இன்னொரு வீடியோவைப் பதிவுசெய்துள்ளார்.

கொரோனா வைரஸ், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவிவருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மருத்துவமனை நடத்திவந்த திருத்தணிகாசலம், கொரோனாவுக்கு என்னிடம் மருந்துள்ளது என சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவுசெய்திருந்தார்.

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

தொடர்ந்து திருத்தணிகாசலம் வெளியிட்ட வீடியோக்கள், சுகாதாரத்துறையினரையும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையினரையும் அதிர்ச்சியடையவைத்தது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் கணேசன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில், துணை கமிஷனர் நாகஜோதி உத்தரவில், கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்பார்வையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. போலீஸாரிடம் புகார் சென்றதும் சமூக வலைதளங்களில் பதிவுசெய்த வீடியோக்களை திருத்தணிகாசலம் நீக்கினார். அதோடு அவர் தலைமறைவானார்.

இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், தேனி, பெரியகுளத்தில் பதுங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது. அங்கு சென்று அவரை போலீஸார் கைது செய்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

`90 வீடியோக்கள்; கொரோனாவுக்கு மருந்து!' -சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சிக்கிய கதை
திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருத்தணிகாசலம் மீது வந்த புகாருடன், அவர் போலி மருத்துவர் என்பதற்கான ஆதாரங்களும் எங்களுக்குக் கிடைத்தன. கடலூர் மாவட்டத்தில் போலியான சான்றிதழை திருத்தணிகாசலம் பெற்று சிகிச்சை அளித்துவந்துள்ளார். மேலும், 'கொரோனா நோயாளிகளின் ரத்தத்தை என் உடலில் ஏற்றுங்கள்; விரைவில் நான் தயாரித்த மருந்துகள் மூலம் குணமடைந்து காட்டுகிறேன்' என்று வீடியோ ஒன்றில் பதிவுசெய்துள்ளார்.

மேலும், 'என் மருந்து குணப்படுத்தவில்லை என்றால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று அரசுக்கு சவால்விடுக்கும் வகையில் இன்னொரு வீடியோவைப் பதிவுசெய்துள்ளார். அதோடு, மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவர் ஒருவருக்கு தான்கொடுத்த மருந்தால் அவர் குணமடைந்துள்ளார் என்றும் வீடியோவில் திருத்தணிகாசலம் குறிப்பிட்டிருந்தார். இப்படி அதிரடியாக அவர் பேசிய வீடியோக்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குகளைப் பதிவுசெய்துள்ளோம்.

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

தேனியிலிருந்து சென்னைக்கு திருத்தணிகாசலத்தை அழைத்துவந்தபோது, அவர் சகஜமாகவே இருந்துள்ளார். அவருக்கு உணவு, டீ வாங்கி கொடுத்தபோது அதை அவர் சாப்பிட்டார். பின்னர், எங்களின் கேள்விகளுக்கும் விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'எதற்காக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகப் பொய் சொன்னீர்கள்' என்று கேட்டோம். அதற்கு அவர், 'நான் பொய் சொல்லவில்லை. என்னிடம் கொரோனாவுக்கு மருந்து உள்ளது' என்று கூறினார். மேலும் அவர், `என்மீது உங்களுக்கு சந்தேகம் என்றால், நான் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டுப்பாருங்கள்' என்று தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகு, திருத்தணிகாசலத்தை சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு