Published:Updated:

`நெருக்கடி; இரவில் மிரட்டல்; தலைமறைவு வாழ்க்கை!'- சிமென்ட் ஆலையால் பதறும் அரியலூர் விவசாயிகள்

ராம்கோ சிமென்ட் ஆலை வற்புறுத்தலால் பலர் நிலங்களைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். தற்போது இருக்கும் மக்களுக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரியலூர் சிமென்ட் ஆலை
அரியலூர் சிமென்ட் ஆலை

`அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலையை எதிர்த்த விவசாயிகள் மீது பொய்ப் புகார் கொடுத்து அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்' என்று புகார் எழுந்திருக்கிறது. இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து போலீஸார் மிரட்டுவதால் காவல்துறையினருக்குப் பயந்து விவசாயிகள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம் அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் ராம்கோ சிமென்ட் ஆலையின் வற்புறுத்தலால் அவர்களுடைய முழு சொத்துகளையும் விற்றுவிட்டு வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள். தற்போது மீதமுள்ள 200 குடும்பங்களையும் காலிசெய்யும் நோக்கத்தில் பல குடைச்சல்களை ஆலை நிர்வாகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.

இந்த நிலையில் ராம்கோ சிமென்ட் ஆலை சுரங்கப்பணிக்கு இடையூறு செய்வதாக வெங்கடாஜலபதி, திருவேங்கடம், சீனிவாசன் ஆகியோர் மீது கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் போலீஸார் மிரட்டிக்கொண்டிருப்பதாகவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலும் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.

திருவேங்கடம்
திருவேங்கடம்

தலைமறைவாக இருக்கும் திருவேங்கடத்திடம் பேசினோம். ``இம்மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும் 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சுரங்கங்களும் இருக்கின்றன. `இந்த சிமென்ட் ஆலையால் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறோம்' என்று பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். ராம்கோ சிமென்ட் ஆலைகள் வற்புறுத்தலால் பலர் நிலங்களைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். தற்போது இருக்கும் மக்களுக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மட்டும் 25 ஏக்கருக்கும் மேல் நிலம் இருக்கிறது. இந்த நிலங்களைப் பலமுறை என்னிடம் கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை. அதிகவிலை கொடுப்பதாகவும் சொன்னார்கள். நான் மசியவில்லை. இதனால் கடுப்பான அவர்கள் என்னை ஆட்களை வைத்து அடித்தார்கள்.

மண்டை உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த நிலையில் எனது நிலத்துக்கு அருகில் சுண்ணாம்பு சுரங்கத்தைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய இடத்தையும் சேர்த்துத் தோண்டுகிறார்கள். அத்தோடு இங்கு வெளியாகும் மண் புகையால் கரும்பு மற்றும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டுவதால், நான்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

சூழலியல் செயற்பாட்டாளர் அருண் மொழி வர்மன்
சூழலியல் செயற்பாட்டாளர் அருண் மொழி வர்மன்

ஆனால், ஆலை நிர்வாகத்தினர் எங்கள் மீது புகார் கொடுத்திருப்பது கோபமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து போலீஸார் மிரட்டுகிறார்கள். எங்களுடைய உயிரே போனாலும் நிலங்களை சிமென்ட் ஆலைகளுக்குக் கொடுக்கமாட்டோம்" என்று ஆதங்கத்தோடு முடித்தார்.

இதுகுறித்து சூழலியல் செயற்பாட்டாளர் அருண் மொழிவர்மனிடம் பேசினோம்.``அரியலூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மாவட்டங்களிலேயே அதிக வருமானங்கள் தரக்கூடிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கனிம வளக் கொள்ளையில் முதல் பலியானது அரியலூர் மாவட்டம்தான்.

மீத்தேன், நியூட்ரினோ, கெயில், ஷேல்கேஸ் போன்ற திட்டங்களை எதிர்த்து மக்கள் வீதியில் வந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், இதற்கு முன்பே 1990-ம் ஆண்டில் இருந்தே மிகப்பெரிய கனிமவளக் கொள்ளை அடிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான். ஆனால், அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் அமைதியாக இருக்கின்றனர்.

சிமென்ட் ஆலையை எதிர்த்துப் போராட்டம்
சிமென்ட் ஆலையை எதிர்த்துப் போராட்டம்

ராம்கோ சிமென்ட் ஆலை, விவசாயிகளின் நிலத்தைக் கேட்டு பலவிதங்களில் டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். நிலத்தைக் கொடுக்காத விவசாயிகளைக் காவலர்களை வைத்து மிரட்டுவது, அடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் அரசு அனுமதித்துள்ள சட்ட திட்டங்களும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன" என்றார் ஆதங்கத்துடன்.

`சிமென்ட் ஆலையால் கொஞ்சம் கொஞ்சமா சாகிறோம்; அனுமதி கேட்கிறீங்க'- அரியலூர் கலெக்டரிடம் குமுறிய மக்கள்

இதுதொடர்பாக ராம்கோ சிமென்ட் ஆலையின் பி.ஆர்.ஓ முருகானந்தத்திடம் பேசினோம். நாம் கூறிய தகவலை முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், `இந்த ஆலை எனது கட்டுப்பாட்டில் வராது. கண்ணன் என்ற பி.ஆர்.ஓ-வைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று கூறி இணைப்பைத் துண்டித்தார். அடுத்தாக பி.ஆர்.ஓ கண்ணனையும் நாம் தொடர்புகொண்டோம். அவரும் அதே பதிலைச் சொன்னதோடு, `எங்கள் அதிகாரியின் எண்ணை கூகுளில் தேடி எடுத்து, அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என்றதோடு முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து ராம்கோ பி.ஆர்.ஓ கண்ணன் நம்மிடம் பேசினார். "நாங்கள் யாரையும் துன்புறுத்தி நிலங்களை வாங்கவில்லை. அப்படி வாங்கவும் மாட்டோம். எங்களது ஆலை நிர்வாகம் சட்டதிட்டங்களை மதித்து திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதிகாரியிடம் மனுக்கொடுக்கவில்லை. அவர்கள் தான் மனுக்கொடுத்தார்கள் அதன் பெயரியல் பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இருவரும் பேசி சுமுகமாக முடித்துக்கொள்ள அதிகாரிகள் அறிவுரை சொன்னார்கள். இவர்கள் வேண்டுமென்றே அபாண்டமாக பழிசுமத்துகிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.