Published:Updated:

மதுரை: தொடர் ஊழல் புகார்கள்... மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியைப் பொறிவைத்துப் பிடித்த சி.பி.ஐ!

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வருவதுபோல மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாக வருவதாகச் சொல்கிறார்கள் இந்த விவகாரம் குறித்து அறிந்த அதிகாரிகள் சிலர்.

ஒப்பந்தப் பணிகளுக்கான தொகையை வழங்க லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளரையும், லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்களையும் சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததன் மூலம், மாநில பொதுப்பணித்துறையில் நடைபெறும் ஊழல்களுக்கு நிகராக, மத்திய பொதுப்பணித்துறையிலும் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

மதுரையிலுள்ள மத்திய பொதுப்பணித்துறை மண்டல அலுவலகத்தில் நிர்வாகப் பொறியாளராக பணியாற்றிவருபவர் பாஸ்கர். இவர்மீது பல்வேறு ஊழல் புகார்கள் சிபிஐ-க்குச் சென்றுள்ளன.

அந்த அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் நிர்வாகப் பொறியாளர் பாஸ்கரைப் பற்றி ரகசியமாக விசாரித்தும், அவருடைய அலுவலக தொலைபேசி மற்றும் அலைபேசிக்கு வரும் அழைப்புகளை கண்காணித்தும் வந்தனர்.

இந்தநிலையில் மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளை எடுத்துவந்த ஒப்பந்ததாரர்களான சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகிய இருவர், தாங்கள் எடுத்த பணிக்கான தொகையை உடனடியாக வழங்கும்படி பாஸ்கரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தனக்கு லஞ்சம் தர வேண்டும் எனப் பேரம் பேசியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டவர்களிடம் வீட்டுக்கு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

சி.பி.ஐ
சி.பி.ஐ

இதை சி.பி.ஐ அதிகாரிகள் உறுதி செய்துகொண்டனர். நேற்று முன்தினம் இரவு மதுரை மீனாம்பாள்புரத்திலுள்ள மத்திய அரசு அலுவலர் குடியிருப்பிலுள்ள பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர் ராஜா, நாராயணன் இருவரும் லஞ்சப் பணத்துடன் வந்துள்ளனர்.

லஞ்சப் பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், பொறியாளர் பாஸ்கரையும் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் இருவரையும் கைதுசெய்து ரூ 70,000-ஐயும் கைப்பற்றினார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

அதன் பிறகு மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொறியாளர் பாஸ்கர் அறையைச் சோதனை நடத்தி, அங்கும் கவர்களில் இருந்த பணத்தைக் கைப்பற்றினர். இதையும் சேர்த்து மொத்தம் ரூ 1,85,000-யுடன் மூவரையும் மதுரை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார்கள். தொடர்ந்து மதுரை மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்துவரும் ஊழல்களை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வருவதுபோல, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாகவருவதாகச் சொல்கிறார்கள் இந்த விவகாரம் குறித்து அறிந்த அதிகாரிகள் சிலர்.

அடுத்த கட்டுரைக்கு