Published:Updated:

`அம்மா சிமென்ட்’ விற்பனையில் முறைகேடு! - ஆற்காட்டில் சிக்கிய குடோன் பொறுப்பாளர்

ஆற்காட்டில் `அம்மா’ சிமென்ட் மூட்டைகளை லோடு லோடாகக் கள்ளச் சந்தையில், முறைகேடாக விற்ற நுகர் பொருள் வாணிபக் கிடங்கின் பொறுப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

குடோன் பொறுப்பாளர்
குடோன் பொறுப்பாளர்

தமிழகத்தில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில், ‘அம்மா சிமென்ட்’ என்னும் திட்டத்தை அறிவித்தார். 190 ரூபாய்க்கு ஒரு மூட்டை சிமென்ட் விற்பனை செய்யப்படுகின்றன. இதைப் பெறுவதற்கு ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் சான்றிதழை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள அம்மா சிமென்ட் விற்பனை பொறுப்பாளரிடம் வழங்க வேண்டும். 

அம்மா சிமென்ட்
அம்மா சிமென்ட்

எத்தனை மூட்டை சிமென்ட் வாங்குகிறோமோ, அதற்கான ‘டிடி’-யையும் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். ‘டிடி’ எண்ணை இணையத்தில் பதிவேற்றிய பிறகு, ஒரு வாரத்துக்குள் சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படும். இதுதான் நடைமுறை. இதைப் பல இடங்களில் முறையாகப் பின்பற்றுவதில்லை. முறைகேடாக அலுவலர்களே பணத்தைப் பெற்றுக்கொண்டு, அம்மா சிமென்ட் மூட்டைகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக, தமிழகம் முழுவதுமே புகார்கள் உள்ளன. பயனாளிகளும் அலைச்சலைத் தவிர்க்க மாமூல் கொடுத்து, சிமென்ட் மூட்டைகளை வெகு சீக்கிரம் வாங்கப் பார்க்கிறார்கள்.

இந்த நிலையில், கள்ளச் சந்தையில் அம்மா சிமென்ட் மூட்டைகளை லாரி லாரியாக விற்றதாக கையும் களவுமாக அலுவலர் ஒருவர் சிக்கியிருக்கிறார். வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்நேத்தம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கின் பொறுப்பாளராக அறிவழகன் என்பவர் உள்ளார். வீடுகளைப் புதுப்பிக்கவும் பழுது பார்க்கவும் உரிய விண்ணப்பத்துடன் அலைந்து திரிந்து, சிமென்ட் மூட்டைகளை வாங்கவரும் பயனாளிகளிடம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையில் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் அறிவழகன் சிமென்ட் கொடுத்ததாகப் புகார் சொல்கிறார்கள். 

குடோன் பொறுப்பாளர் அறிவழகன்
குடோன் பொறுப்பாளர் அறிவழகன்

தவிர, கள்ளச் சந்தையில் லாரி லாரியாக சிமென்ட் மூட்டைகளைத் தனியாருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒரு மூட்டை சிமென்ட்டை 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு வெளியில் விற்பனை செய்து லட்சக்கணக்கில் ‘கமிஷன்’ அடித்திருப்பதாகவும், இந்தக் கணக்குகளை முறைகேடாக இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார்கள் குவிந்தது. அதையடுத்து, மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் ஜோதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், 24-ம் தேதி மாலை 4 மணிக்கு மேல்நேத்தம்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்குச் சென்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். 

குடோன் பொறுப்பாளர் அறிவழகனிடமிருந்து, கணக்கில் வராத ரூ.50,600 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். தவிர, அம்மா சிமென்ட்டை முறைகேடாக விற்பனை செய்துவந்ததற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். இரவு 8 மணிக்குச் சோதனை நிறைவுபெற்றது. நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர், ‘‘லோடு லோடா அம்மா சிமென்ட் மூட்டைகள் மாயமாகியிருக்கின்றன. இப்போதுகூட நான்கு லாரி சிமென்ட் மூட்டைகளை முறைகேடாக விற்பனை செய்வதற்காகத்தான் அந்தத் தொகையைக் குடோன் பொறுப்பாளர் வாங்கியிருக்கிறார். அதற்கான ஆவணங்களும் சிக்கியிருக்கின்றன. 

லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்ச ஒழிப்புத் துறை

அதை வைத்து, குடோன் பொறுப்பாளர் அறிவழகன் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளோம்’’ என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே குடோனுக்கு லாரியில் வந்த அம்மா சிமென்ட் மூட்டைகளை ஆற்காடு அருகே சாலையோரம் நிறுத்தி முறைகேடாக வேறொரு லாரியில் ஏற்றிச்சென்றனர். இதுபற்றி அப்போதே, போட்டோ ஆதாரங்களுடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனாலும், ஊழலும் முறைகேடும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற அலுவலர்களை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான், மற்ற அலுவலர்களுக்குப் பயம் வரும்’’ என்று வலியுறுத்துகிறார்கள் பொதுமக்கள்.