Published:Updated:

`ஹரியானா லாரியில் 72 உ.பி இளைஞர்கள்!’ -நீலகிரி சோதனைச் சாவடி அதிகாரிகள் அதிர்ச்சி

lorry
lorry

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி விண்ணப்பித்துக் காத்திருந்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அனைவரும் நடந்தே செல்ல முடிவுசெய்து சாலக்குடி வரை ரயில் பாதை மற்றும் வனப்பகுதி வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தோம்.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களோடு நீண்ட எல்லையைப் பகிரும் நீலகிரி மாவட்டத்தில், எல்லையோர சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் உஷார்படுத்தப்பட்டு சிறப்பு குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

state border
state border

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 15-ம் தேதியே இரண்டு மாநில எல்லைகளும் மூடப்பட்டு, போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மிக அவரச‌ தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து சரக்கு லாரி ஒன்று கர்நாடகா செல்ல இன்று காலை தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடிக்கு வந்தது. அந்த லாரியை சோதனையிட்டபோது, லாரிக்குள் ஏராளமான இளைஞர்கள் இருந்துள்ளனர்.

கக்கநல்லா சோதனைச்சாவடி.
கக்கநல்லா சோதனைச்சாவடி.

அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவர்களைக் கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளைஞர்கள் அனைவரும் கேரளாவில் இருந்து கர்நாடகா சென்று அங்கிருந்து தங்களது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்திற்கு செல்ல முடிவு செய்து லாரியில் வந்தது தெரியவந்தது.

காவல்துறையினர், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். கூடலூரில் இருந்து வருவாய்த்துறையினர் அந்த இளைஞர்களிடம் பேசுகையில், "கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலப்பி பகுதியில் கம்பளி வியாபாரம் செய்துவந்தோம். கொரோணா ஊரடங்கு காரனமாக வியாபாரம் செய்ய முடியாமல், பணம் இன்றி கடந்த 40 நாள்களுக்கும் மேலாக இருந்தோம். எங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி அந்த மாவட்டத்தில் விண்ணப்பித்து காத்திருந்தோம்.

கக்கநல்லா சோதனைச்சாவடி.
கக்கநல்லா சோதனைச்சாவடி.

எந்த நடவடிக்கையும் இல்லை. அனைவரும் நடந்தே செல்ல முடிவு செய்து சாலக்குடி வரை ரயில் பாதை, மற்றும் வனப்பகுதி வழியாக சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்தோம். வழியில் ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி அதில் ஏறி வந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் வருவாய்த்துறையினர், ``உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 72 பேர் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது. சிரமங்களுக்கு மத்தியில் நடந்தும் லாரியிலும் வந்த தங்களை எப்படியாவது சொந்தஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அவர்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். கூடலூர் அரசு போக்குவரத்து கிளையில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலம் அனைவரையும் மீண்டும் எர்ணாகுளம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து, கேரள அரசின் ஏற்பாட்டில் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்," என்றனர்.

lorry
lorry

ஊரடங்கு உத்தரவை மீறி பயணிகளை ஏற்றிவந்த கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அசன் (22) மசினகுடிபோலீஸாரால் கைது செய்யப்பட்டு, லாரியையும் பறிமுதல் செய்து மசினகுடி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு