Published:Updated:

`பாலாற்றில் ரசாயனக் கழிவுகள்; மாவட்ட நிர்வாகம் துணைபோகிறதா?!’ -கடுகடுக்கும் சீமான்

சீமான்
சீமான்

``மேல்விஷாரத்தில், ரசாயனக் கழிவுநீரைப் பாலாற்றில் கலந்துவிடும் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து பலமுறை புகாரளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்துக்குத் துணைபோவது வன்மையான கண்டனத்துக்குரியது’’ என சீமான் கடுகடுத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தை சூழல் மாசுபாடு மிகுந்த பகுதியாக வகைப்படுத்தியிருக்கிறது, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம். இங்குள்ள பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் கழிவுகளை நிலத்திலும், நீர்நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை மாவட்டமே உருக்குலைந்துவருகிறது. இந்தநிலையில், பாலாற்றின் வளத்தை முற்றிலும் நாசப்படுத்தும் வகையில், மேல்விஷாரம் நகரத்திலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தினந்தோறும் நள்ளிரவில் சட்டவிரோதமாக மழைநீர் ஓடையில் கழிவுநீரைத் திறந்துவிடும் அதிர்ச்சிகரத் தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பாலாற்றில் தொழிற்சாலைக் கழிவுகளை கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாலாற்றில் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர்
பாலாற்றில் வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர்

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘``மேல்விஷாரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் பாலாற்றில் கலந்துவிடும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தோல் பதனிடுதல், சாயத் தொழில், சர்க்கரைத் தொழில்கள் போன்ற நீர் சார்ந்த தொழில்களும், தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளன. இவற்றில் உருவாகும் ரசாயனக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தொழிற்சாலையின் மறு பயன்பாட்டுக்கு உகந்த வகையில் சுத்திகரிக்கப்பட வேண்டும். ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத அல்லது ஓரளவு மட்டும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் அதிக அளவில் ஆற்றிலேயே விடப்படுகின்றன.

வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் குறித்துப் பலமுறை நீதிமன்றங்களும், மாசு கட்டுப்பாடு வாரியமும் கண்டித்ததோடு நடவடிக்கைகளும் எடுத்துள்ளன. இருப்பினும், கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுவது குறைந்தபாடில்லை. பாலாற்றில் கலக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து மக்களின் குடிநீருக்குச் சிக்கல் ஏற்பட்டிருப்பதோடு, பாலாற்று நீரை அருந்தும் கால்நடைகளும் உயிரிழக்கும் துயரங்கள் நேர்வது பெரும் வேதனையைத் தருகிறது.

அளவுக்கதிகமான கழிவுநீர் கலப்பால் வேளாண்மை செய்ய முடியாத அளவுக்கு நிலம் மாசுபட்டு, மலட்டுத்தன்மை அடைந்திருப்பதால் ராணிப்பேட்டை விவசாயிகள் வேளாண்மையை முழுவதுமாகக் கைவிட்டு, மாற்று வேலைக்குச் செல்லவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மிதமிஞ்சிய கழிவுகளால் நிலம், நீர், காற்று என யாவும் பெருமளவு கெட்டு, சுற்றுச்சூழல் முற்றாகச் சீர்குலைவதோடு, பல்வேறு கொடிய நோய்களுக்கும் அந்தப் பகுதியினர் ஆளாகி சுகாதார வாழ்வும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீமான்
சீமான்

இத்தகைய பாதிப்புகள் குறித்தும், நள்ளிரவு நேரங்களில் தொழிற்சாலைகளிடமிருந்து பெறப்படும் கழிவுநீரைப் பாலாற்றில் கலந்துவிடும் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் சார்பாகவும், நாம் தமிழர் கட்சி சார்பாகவும் பலமுறை புகாரளிக்கப்பட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காஅல், சுத்திகரிப்பு ஆலை நிர்வாகத்துக்குத் துணைபோவது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்துக்கு வரவேண்டிய நீர்வளத்தை மறிப்பதாலும், கட்டுப்பாடற்ற தொடர் மணல் கொள்ளையாலும் பாலாறு வறண்டு, ஓடைபோலக் குறுகி, சுருங்கிவிட்டது. தன்னியல்பையும் உயிரோட்டத்தையும் இழந்து நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவலையைத் தருகிறது.

தொழிற்சாலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சட்டவிரோதமாகத் திறந்துவிடப்படும் ரசாயன கழிவுநீர் பாலாற்றில் கலக்கும் காட்சிகள் ஊடகங்களின் வாயிலாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் அக்கறையின்மையையும்தான் காட்டுகிறது. இந்தச் சிக்கலில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, தொழிற்சாலைக் கழிவுகளைப் பாலாற்றில் விடும் தனியார் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டுமெனவும், ராணிப்பேட்டை பகுதி மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய நாசகாரத் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அவற்றையும் உடனடியாக மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என சீமான் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு