Published:Updated:

`முள்வேலி தடுப்பு; எறும்பு சாக்பீஸ்; காய்கறிக்கு கட்டுப்பாடு! - இது செங்கல்பட்டு ஃபார்முலா #corona

முள்வேலி தடுப்பு
முள்வேலி தடுப்பு

ஊருக்கு வந்த இளைஞர்கள் முதல் வேலையாக தண்டரையிலிருந்து முள்ளிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி வேலி அமைத்தனர்.

கொரோனா தாக்குதல் எதிரொலியாக இந்தியா முழுவதிலும் 21 நாள்களுக்கு 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளிலேயே தடையை மீறி வெளியே சென்றவர்கள் தடியடிக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விநோத காட்சிகளைக் காண முடிந்தது. இரண்டாவது நாளான இன்று செங்கல்பட்டு பகுதியில் வெளிநபர்கள் ஊருக்குள் நுழையாமல் இருக்க முள்வேலி அமைப்பது உள்ளிட்ட காட்சிகளை காணமுடிகிறது.

செங்கல்பட்டு பகுதியில் மருந்து தெளிப்பு
செங்கல்பட்டு பகுதியில் மருந்து தெளிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொட்டமேடு பகுதியில் மது வாங்குவதற்காகப் பெரிய இரும்பேடு பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது `பக்கத்து ஊருல எல்லாம் கொரோனா வந்துவிட்டது. அடுத்து உங்க ஊர்லயும் கொரோனா வந்துவிடும்’ எனப் பீதியைக் கிளப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஊருக்கு வந்த அந்த இளைஞர்கள் முதல் வேலையாக தண்டரையிலிருந்து முள்ளிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி வேலி அமைத்தனர். இதனால் தண்டரை, அமிர்தபள்ளம், ஆதிகேசவபுரம், பெரிய இரும்பேடு, சின்ன இரும்பேடு, முள்ளிப்பாக்கம், ஒரத்தூர் ஆகிய கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.

ரேஷன் பொருள்களும், மருத்துவப் பொருள்களும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்பு அப்பகுதியில் உள்ள சிலர் முள்வேலியை அகற்ற முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த முள்வேலி அப்புறப்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டுக்குச் செல்பவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. காலை 7 மணியிலிருந்து 11 மணிவரையும், மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணிவரை மட்டுமே காய்கறி மார்க்கெட் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மார்க்கெட்
செங்கல்பட்டு மார்க்கெட்

இருசக்கர வாகனங்கள் மார்க்கெட் உள்ளே செல்ல முடியாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மேலும் காய்கறி வாங்கச் செல்பவர்கள் கையில் சானிட்டைசர் தெளித்த பின்னரே அவர்கள் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் உள்ளே செல்பவர்கள் நெருக்கமாகவும் கூட்டம் கூட்டமாகக் கூடுவதையும் பார்க்க முடிகிறது.

மருந்துக் கடைகள் திறந்திருக்க அனுமதி உண்டு என்றாலும் பெரும்பாலான மருந்துக் கடைகளில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றுவதில்லை. ஒரு கடையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இடைவெளி விட்டு நிற்காமல் குழுவாகச் சேர்ந்து அந்த மருந்துக் கடையை மொய்த்துக் கொள்கிறார்கள்.

மெடிக்கல் கடைகளுக்கு கட்டுப்பாடு
மெடிக்கல் கடைகளுக்கு கட்டுப்பாடு

ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் இதுபோன்ற காட்சியைக் கண்ட காவலர்கள் அந்த மருந்துக் கடை ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்தனர். `பெயின்ட் அல்லது சாக்பீசால் கோடு போட வேண்டும்’ என காவல்துறையினர் சொன்னபோது, `அதை வாங்குவதற்கு எங்கும் கடைகள் இல்லை’ என ஊழியர்கள் தெரிவித்தனர். `எறும்பு சாக்பீஸ் இருக்கா. இருந்தால் எடுத்து 3 அடி இடைவெளி விட்டு கோடு போடுங்க’ எனக் காவலர் ஒருவர் ஐடியா கொடுத்தார். பின்னர் ஊழியர் ஒருவர் எறும்பு சாக்பீஸ் கொண்டு வந்து கோடுகளைப் போட்டார்.

இன்னும் புதுசு புதுசா என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ?

அடுத்த கட்டுரைக்கு