Published:Updated:

தென்காசி: ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர் - தனித்தீவான கிராமம்!

தண்ணீர் தேங்கிக் கிடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை

செங்கானூர் கிராமத்துக்குள் செல்லமுடியாதபடி ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதால் கிராமமே தனித்தீவு போல மாறி விட்டது. கிராம மக்கள், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஆளுநருக்கு அனுப்பினர்.

தென்காசி வட்டம், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம், செங்கானூர். 500 பேர் குடியிருந்து வரும் இந்த கிராமம் பேரூராட்சியின் கீழ் வருவதால், வழக்கமாக கிராம பஞ்சாயத்துக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளோ அடிப்படைத் தேவைகளோ கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

தண்ணீர் தேங்கிய சுரங்கப்பாதை
தண்ணீர் தேங்கிய சுரங்கப்பாதை

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய செங்கானூர் கிராமத்துக்குள் செல்வதற்கு ஆள் இல்லாத லெவல் கிராசிங் இருந்து. அதை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழைக் காலத்தில் அதில் ஆளுயரத்துக்கு தண்ணீர் தேங்குகிறது. பாலத்தின் அருகில் ஆளுயரப் பள்ளம் இருப்பதால் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

போக்குவரத்துக்கு வழி இல்லாத சூழல் குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், பொதுமக்களால் அவசரத்துக்கு வெளியே செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் கூட ஊருக்கு வர முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

கிராம மக்கள் எதிர்ப்பு
கிராம மக்கள் எதிர்ப்பு

வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் செல்வதற்குக் கூட முடியவில்லை. கர்ப்பிணிப் பெண்கள் வெளியூர்களுக்கு உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குழந்தை பிறந்த பிறகே ஊருக்குள் அழைத்து வரப்படுவதாக கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து பேசிய செங்கானூர் கிராம மக்கள், ``எங்கள் ஊருக்குப் பேருந்து வசதி, பொதுக்கழிப்பிடம், மருத்துவ மையம், சமுதாய நலக்கூடம் இல்லை. எங்கள் கிராமத்துக்கான பெயர் பலகை கூட கிடையாது. பல ஆண்டுகளாக சாலை செப்பணிப்படவே இல்லை.

கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க அமைக்கப்பட்ட கரங்கப்பாதை தொட்டி போல் கட்டப்பட்டதால் தண்ணீர் தேங்குகிறது. எங்களின் பிரச்னையைத் தீர்க்கக் கோரி நாங்கள் விடுத்த கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் எங்களின் ஒட்டுமொத்த வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஆளுநருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்கள்.

ஏரல்:`எப்படித்தான் அந்தப் பாவிக்குக் கொல்ல மனசு வந்துச்சோ?!’ - எஸ்.ஐ பாலுவை நினைத்து உருகும் கிராமம்

இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு,``ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், சுரங்கப்பாதையில் மேல்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதைப் பொதுமக்கள் ஏற்க மறுக்கிறார்கள். அப்படி மேல்கூரை அமைத்தால் குகை போல மாறி பெண்கள் செல்ல முடியாத நிலை உருவாகிவிடும் என மக்கள் அஞ்சுகிறார்கள்.

கிராமத்தின் வெளிப்பகுதியில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்
கிராமத்தின் வெளிப்பகுதியில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்

கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பிடம், சாலை வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு