Published:Updated:

விபத்தில் சிக்கிய போலீஸ் ஏடிஜிபி -யின் கார் டிரைவர்- உயிருக்குப் போராடியவரை இன்னொரு கார் மோதிய சோகம்

விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் காவலர் ராம்கி
விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் காவலர் ராம்கி

சென்னை - மதுரவாயல் பைபாஸ் சாலையில், பைக்கிள் வீட்டுக்குச் சென்ற ஏடிஜிபி-யின் கார் டிரைவர், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை - மதுரவாயல் பைபாஸ் சாலை, முடிச்சூர் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துகிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, இறந்துகிடந்தவரின் அருகில் பைக் ஒன்றும் சேதமடைந்த நிலையில் கிடந்தது.

காவலர் ராம்கி
காவலர் ராம்கி
ஆள் நடமாட்டம் இல்லாததால், விபத்தில் சிக்கிய ராம்கி, பைபாஸ் சாலையிலேயே நீண்ட நேரமாக உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற காரும் ராம்கி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதனால்தான் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
போலீஸ்

உயிரிழந்தவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவரின் பெயர் ராம்கி (31) என்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. இவர், ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த சில மாதங்களாக, போலீஸ் ஏடிஜிபி ஒருவருக்கு கார் டிரைவராகப் பணியாற்றியுள்ளார்.

பணி முடிந்து நேற்றிரவு மதுரவாயல் பைபாஸ் சாலையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது நடந்த விபத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர் ராம்கி, விபத்தில் சிக்கியது எப்படி என்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில், பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.

டூவீலர் மீது மோதிய கார்; விபத்து செட்அப்! - ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த படுகொலை
விபத்து
விபத்து

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் பணியாற்றும் போலீஸ் ஏடிஜிபி ஒருவரிடம் கடந்த 2 மாதங்களாக காவலர் ராம்கி, டிரைவராகப் பணியாற்றிவந்துள்ளார். இவரின் வீடு மதுராந்தகத்தில் உள்ளது. அதனால் சென்னையிலிருந்து மதுராந்தகத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் அவரின் பைக் விபத்தில் சிக்கியுள்ளது. அவரின் பைக் மீது எந்த வாகனம் மோதியது என்று தெரியவில்லை. ஆள்நடமாட்டம் இல்லாததால், விபத்தில் சிக்கிய ராம்கி, பைபாஸ் சாலையிலேயே நீண்ட நேரமாக உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற காரும் ராம்கி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதனால்தான் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். நீண்ட நேரத்துக்குப் பிறகே காவல்துறைக்கு தகவல் கிடைத்து, உயிரிழந்த ராம்கியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். விபத்து குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு