Published:Updated:

ஆன்லைன் ரம்மி: பணம் இழந்த விரக்தி... கடன் நெருக்கடி - தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்!

கடன் தொல்லை தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மி: பணம் இழந்த விரக்தி... கடன் நெருக்கடி - தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்!

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
கடன் தொல்லை தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்

சென்னை மணலி, எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன். இவருக்குத் திருமணமாகி துர்கா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடிவந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் பார்த்திபன் சம்பாதிக்கும் பணத்தைத் தாண்டி அவரின் நண்பர்களிடம் கடன் வாங்கி தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார்.

பார்த்திபன்
பார்த்திபன்

பார்த்திபன் சமீபத்தில், தன்னுடைய மனைவியிடம் அவசரமாகப் பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து துர்கா, மகளிர் சுய உதவிக்குழு வழியாக ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பார்த்திபன், அந்தப் பணத்தையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்திருக்கிறார். இந்த விவகாரம் அனைத்தும் துர்காவுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது.

ஒருகட்டத்தில், பார்த்திபனுக்குக் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லை ஒரு பக்கம், இழந்த பணம் இன்னொரு பக்கம் என்று கடும் மனஉளைச்சலில் இருந்த பார்த்திபன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவமறிந்து வந்த மணலி பகுதி போலீஸார் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீதனா மாஞ்சி
ஸ்ரீதனா மாஞ்சி

மேலும், இந்தத் தற்கொலை தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, தென்காசி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 70 ஆயிரம் ரூபாயை இழந்த விரக்தியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதனா மாஞ்சி என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.