Published:Updated:

`300 லிட்டர் கொள்ளளவு; 2 நாள் பதப்படுத்தும் திறன்!' - சென்னையில் அசத்தும் மில்க் ஏ.டி.எம்

மில்க் ஏ.டி.எம்
மில்க் ஏ.டி.எம்

பால் உற்பத்தியாளர்களால் கறந்த பாலினை நுகர்வோருக்கு, காலை மாலை என இரண்டு வேளைகள் மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், இந்த ஏ.டி.எம் மூலம் எந்த நேரமும் வழங்கலாம்!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் எதிரொலிக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் பணமில்லாப் பரிவர்த்தனை பல இடங்களில் நடைமுறையாகி வருகிறது. வட இந்தியாவில் பணமெடுக்கும் ஏ.டி.எம் மிஷின் போலவே பால் வழங்கவும் ஒரு மெஷின் தயாரித்திருக்கின்றனர். அதை, தனது வாடிக்கையாளர்களின் சேவைக்குப் பயன்படுத்தி கவர்கிறார் ரமேஷ்.

சென்னைப் போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரியான ரமேஷ். தன் கடையில் தற்போது நுகர்வோருக்கு 24 மணி நேரமும் பால் கிடைக்கும் வகையில் 'மில்க் ஏ.டி.எம்' கொண்டு வந்துள்ளார். அது மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மில்க் ஏ.டி.எம் உடன் ரமேஷ்
மில்க் ஏ.டி.எம் உடன் ரமேஷ்

தன் குடும்பத்தின் தேவைக்காக மாடு வளர்க்க ஆரம்பித்த ரமேஷ், தற்போது தினமும் 150 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்கிறார். தற்போது சென்னையில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையில், பால் ஏ.டி.எம் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் பேசுகையில், "நான் கடந்த 4 வருஷமா பால் வியாபாரம் செஞ்சுட்டு வரேன். காலை, மாலை இரண்டு வேளை மட்டும்தான் கறந்த பால கஸ்டமருக்குக் கொடுக்கறோம். ஆனா கறந்த பாலும் எல்லா நேரமும் கஸ்டமருக்குக் கிடைச்சா நல்லாருக்கும்னு யோசிச்சேன். அந்த ஆசையோட விளைவுதான் இந்த 'மில்க் ஏ.டி.எம்'.

300 லிட்டர் கொள்ளளவும் இரண்டு நாள்கள் பதப்படுத்தும் வசதியும் கொண்டது இந்த மில்க் ஏ.டி.எம் மெஷின். ரூ.10, ரூ.50, ரூ.100 எனப் பணத்தை நாணயமாகவோ, நோட்டாகவோ செலுத்தி அதற்கான பாலைத் தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். ஏ.டி.எம் போன்ற கார்டுகளைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. கிட்டத்தட்ட ஏ.டி.எம் போலதான் இயக்கும் முறையும். மிக எளிமையானது. சிறியவர்கள்கூட வந்து சிரமமின்றி வாங்கிச்செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் 25 கறவை மாடுகள் உள்ளன. அதன்மூலம் ஒரு நாளைக்கு காலை மாலை என இரு வேலையும் சேர்த்து 150 லிட்டர்கள் வரை உற்பத்தி செய்கிறோம்.

ரமேஷ்
ரமேஷ்

அதில், 60 லிட்டர் வரை மட்டுமே தற்போது நுகர்வோர் தேவைக்கு இந்த ஏ.டி.எம்மில் நிரப்பி வருகிறோம். ஆனால், இந்தச் சாதனம் 300 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த ஏ.டி.எம் சாதனத்தை ஹரியானாவிலிருந்து கொண்டுவந்திருக்கிறோம். இதன் விலை 5 லட்சம் ரூபாய். நுகர்வோர் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து ஒரு மாத காலமே ஆகிறது என்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் இதுபோல் பல பால் ஏ.டி.எம் சாதனங்களை, சென்னை முழுவதும் அமைத்து மக்களின் பால் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்றார்.

முன்னதாக கடந்த வருடம் தமிழ்நாட்டில் தர்மபுரியைச் சேர்ந்த முருகன் இதேபோன்று மில்க் ஏ.டி.எம் அமைத்திருந்தார். அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது சென்னையில் முதல் முறையாக ரமேஷ் இந்தத் தானியங்கி பால் சாதனத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு