Published:Updated:

`தினமும் 1000 பேருக்கு உணவு; இரவில் குழந்தைகளுக்கு முன்னுரிமை!'- ஊரடங்கில் அசத்தும் பெண் தொழிலதிபர்

மது சரண்
மது சரண்

"சில வாரங்கள்ல லாக்டெளன் முடிஞ்சுடும்னு நினைச்சோம். ஆனா, அஞ்சு வாரம் ஆகியும் அதேநிலைதான் தொடருது."  

உணவகம், பியூட்டி பார்லர், ஐ.டி டெஸ்டிங் பயிற்சி நிறுவனம் உட்பட பத்து நிறுவனங்களை நடத்திவருகிறார், சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர் மது சரண். கொரோனா ஊரடங்கால் உணவின்றி சிரமப்படும் மக்களுக்கு, தினந்தோறும் உணவு வழங்குகிறார். ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு உணவு. அதை மக்களின் இருப்பிடத்துக்கே கொண்டுசென்று கொடுக்கிறார்.

அவரிடம் பேசினோம்.

உணவு வழங்கும் மது சரண்
உணவு வழங்கும் மது சரண்

“கொரோனா பாதிப்பால கடந்த மார்ச் மாதக் கடைசியில ஒருநாள் மட்டும் இந்தியா முழுக்க ஊரடங்கு இருந்துச்சு. அப்போ, ஆதரவற்ற மக்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படக்கூடாதுனு, அந்த ஒருநாள் மட்டும் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்தேன். பின்னர், மீண்டும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டுச்சு. இதனால, வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்கள் உணவுக்குச் சிரமப்படுவதைத் தடுக்க, தினமும் உணவு கொடுக்க ஆரம்பிச்சேன். சில வாரங்கள்ல லாக்டெளன் முடிஞ்சுடும்னு நினைச்சோம். ஆனா, அஞ்சு வாரம் ஆகியும் அதேநிலைதான் தொடருது.

நிலைமை இயல்புக்குத் திரும்பும் வரை மக்களுக்கு சாப்பாடு கொடுக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். அம்மா உணவகம் இல்லாத பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்குத்தான் உணவு கொடுக்கிறோம். மேலும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட சென்னையிலுள்ள சில அரசு மருத்துவமனைகளுக்குத் தினமும் போறோம். அங்கு சிகிச்சைபெறும் நபரைக் கவனித்துக் கொள்ளும் அவரின் குடும்பத்தினர் சாப்பாடு கிடைக்காம சிரமப்படுறாங்க. அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்கிறோம்.

மது சரண்
மது சரண்

காலையில 200 பேருக்கு டிபன், பொங்கல், கிச்சடி உட்பட ஏதாவது ஒரு டிஷ் கொடுப்போம். மதியம் 500 பேருக்கு, தினம் ஒருவகை கலவை சாதம். கீழ்ப்பாக்கத்துல தினக்கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இருக்கு. அங்க மட்டும் மதியம் 250 பேருக்கு சாப்பாடு கொடுக்கிறோம். இரவு நேரத்துல 300 பேருக்கு டிபன். அதில் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்” என்கிறார்.

தினமும் உணவு சமைக்கும் பணிக்காக, 65-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களைப் பயன்படுத்துகிறார். இதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
மது சரண்
மது சரண்

“என்னுடைய பிசினஸில் ‘மாமிஸ் கிச்சன்’ என்ற நடமாடும் உணவகமும் ஒன்று. தினமும் மக்களுக்குக் கொடுக்க தயாரிக்கப்படும் உணவை அந்த வாகனங்கள்ல கொண்டுபோறோம். அதை, மகளிர் சுயஉதவிக்குழுப் பெண்கள் சிலர் மூலமாகவே பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களுக்குக் கொடுக்கிறோம். பல்வேறு பிசினஸ் செய்தாலும், அதன்மூலம் முடிந்தவரை சமூகத்துக்கும் பங்களிப்பு கொடுத்துவருகிறேன். அந்த வகையில் கொரோனா காலட்டத்துலயும் மக்களுக்கு என்னால் இயன்ற பங்களிப்புதான் உணவு வழங்குவது. கொரோனா பாதிப்பு சரியாகும்வரை மக்களுக்கு இலவசமாகவே உணவு கொடுப்பேன்” என்று உற்சாகமாகக் கூறுகிறார், மது சரண்.

இவர், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியவர். இதற்காக, ஐ.நா அமைப்பின் ‘பெண் தொழில்முனைவோர்களுக்கான தூதுவர்’ என்ற விருது, தமிழக அரசின் விருது, அவள் விகடன் விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு