Published:Updated:

`டெல்லி சென்ற மகனுக்கு நெகட்டிவ்; 95 வயது தந்தை கொரோனாவால் மரணம்!’ - 189 குடும்பங்களுக்கு சீல்

கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட வேதகிரி தெரு
கொரோனாவால் சீல் வைக்கப்பட்ட வேதகிரி தெரு

டெல்லி சென்றுவிட்டு சென்னை திரும்பியவருக்குக் கொரோனா உறுதி செய்யப்படாத சூழலில் அவரின் 95 வயது தந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. வெளிநாடுகள் மற்றும் டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு தமிழகம் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தில் 1,323 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 283 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 228 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர், மணலி ஆகிய 2 மண்டலங்களில் கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

`9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்... இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
சிந்தாரிப்பேட்டை வேதகிரி தெரு
சிந்தாரிப்பேட்டை வேதகிரி தெரு

இந்தநிலையில் சென்னையில் 16,000 ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் குறித்த ரிப்போர்ட் மாநகராட்சியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மக்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அதோடு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடியிருந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் வெளிநபர்கள் செல்ல அனுமதியில்லை. அதோடு அந்தப் பகுதியில் உள்ளவர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் சென்னை சிந்தாரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர், டெல்லி மாநாட்டுக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியதும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி சென்று வந்தவரின் 95 வயதுடைய தந்தைக்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.

`8 இடங்களுக்கு சீல்; ட்ரோன் மூலம் எச்சரிக்கை' - சென்னையில் தெருக்களை மூடியதால் முடங்கிய 50,000 பேர்
சீல் வைக்கப்பட்ட வேதகிரி தெரு
சீல் வைக்கப்பட்ட வேதகிரி தெரு

இதையடுத்து 95 வயது தந்தையை அழைத்துக்கொண்டு அவரின் மகன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்குள்ளவர்கள், இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினர். உடனடியாக முதியவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், முதியவரின் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். பின்னர் முதியவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினர்.

பின்னர், முதியவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர், மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனால், முதியவரின் இறுதி அஞ்சலி நடந்தது. அதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 40 பேர் கலந்துகொண்டனர். இந்தச் சமயத்தில் கடந்த 16-ம் தேதி முதியவரின் முகவரிக்கு சுகாதாரத்துறையினர் வந்தனர். அவர்கள், முதியவர் குறித்து விசாரித்தனர். அப்போது முதியவர் இறந்த தகவல் தெரிந்ததும் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது
கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது
கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்..! - ஜாலியான ஒரு புத்தாண்டு ராசி பலன்! #MyVikatan

அப்போது சுகாதாரத்துறையினர், `முதியவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது' எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். முதியவரின் டெல்லி சென்ற மகன் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதோடு வேதகிரி தெருவில் உள்ள 189 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முதியவரின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிந்தாரிப்பேட்டை வேதகிரி தெரு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு உள்ளே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீஸாரும் சுகாதாரத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ``சிந்தாரிப்பேட்டை வேதகிரியில் குடியிருந்த முதியவருக்கு அவரின் மகன் மூலம் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இருப்பினும் அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். முதியவரின் மகன், பேரன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

சீல் வைக்கப்பட்ட தெருவைக் கண்காணிக்கும் போலீஸ்
சீல் வைக்கப்பட்ட தெருவைக் கண்காணிக்கும் போலீஸ்

முதியவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக அவருக்குக் கொரோனா தொற்று உடனடியாகப் பாதித்துள்ளது. ஆனால், பரிசோதனை முடிவு வர காலதாமதமானதால் 189 குடும்பங்களையும் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்தப் பகுதியினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

இதுகுறித்து வேதகிரி தெரு மக்கள் கூறுகையில், ``சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் ராமநாதபுரம் கீழக்கரையில் தொழிலதிபர் குடியிருந்த பகுதி மற்றும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். விழுப்புரத்திலும் கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா
கொரோனா

தற்போது அவர்கள் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்துவரும் அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் சிலரின் அலட்சியத்தால் இதுபோன்ற தவறுகள் நடப்பது வேதனையளிக்கிறது" என்றனர்.

சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால் சிந்தாரிப்பேட்டை வேதகிரி தெரு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு