Published:Updated:

`அவர்கள் என் அப்பா, அம்மா'- ஆதரவற்றோருக்கு மகன்போல இறுதிஅஞ்சலி செலுத்தும் காவலர்

ஆதரவற்ற நிலையில் இறப்பவர்களின் சடலங்களுக்கு மகன்போல இறுதி அஞ்சலி செலுத்திவருகிறார் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சுரேஷ்.

காவலர் சுரேஷ்
காவலர் சுரேஷ்

பெற்றோரை வீட்டைவிட்டு விரட்டுபவர்கள் வாழும் இந்த உலகத்தில்தான் மதுரவாயல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியற்றும் சுரேஷும் வாழ்ந்துவருகிறார்.

மதுரவாயல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இரண்டு பேர் அநாதையாக சாலையோரத்தில் இறந்துகிடந்தனர். அவர்கள் குறித்த தகவல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்குத் தெரிந்ததும் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்வது முதல் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது வரையிலான பொறுப்பை காவலர் சுரேஷிடம் ஒப்படைத்தார். அதன்படி தந்தைக்கு மகன் இறுதி அஞ்சலி செலுத்துவதைப்போல அனைத்துக் காரியத்தையும் முடித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் காவலர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் வைரலாகிவருவதோடு சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிந்தபடி உள்ளன.

காவலர் சுரேஷ்
காவலர் சுரேஷ்

யார் இந்த சுரேஷ்? என்று இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் விசாரித்தோம். அப்போது அவர், ``மதுரவாயல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அநாதையாக யார் இறந்தாலும் காவலர் சுரேஷிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவோம். பிரேதப் பரிசோதனை தொடங்கி அனைத்தையும் பொறுப்பாக செய்துவிட்டு தகவலை நம்மிடம் கூறுவார். கடந்த மாதத்தில் இரண்டு பேர் சாலையோரத்தில் இறந்துகிடந்தனர். அவர்களின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அவர்களின் விவரங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை காவலர் சுரேஷ் செய்தார். ஆனால், சம்பந்தப்பட்ட இரண்டு பேர் யாரென்று தெரியவில்லை. இதனால்தான் பிணவறையில் இருந்த அவர்களின் சடலத்துக்கு நேற்று காவலர் சுரேஷ் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்" என்றார்.

காவலர் சுரேஷிடம் பேசினோம். ``என்னுடை சொந்த ஊர் வேலூர், காட்பாடி. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய அப்பா பாலு இறந்துவிட்டார். அப்பாவும் காவல்துறையில்தான் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்தேன். அப்பா வயதில் இருப்பவர்களைப் பார்க்கும்போது எனக்கு அவர்கள் மீது இனம்புரியாத மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டுவந்தது. இதனால் அந்த வயதுள்ளவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தேன்.

காவலர் சுரேஷ்
காவலர் சுரேஷ்

கடந்த 2014-ம் ஆண்டு எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றினேன். அப்போது, அந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அநாதையாக யார் இறந்தாலும் அவர்களுக்குரிய இறுதி அஞ்சலி செலுத்தும் பணியை நானே ஏற்றுக்கொண்டேன். எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் நான் பணியாற்றிய காலகட்டத்தில் 5 பேருக்கு இறுதி அஞ்சலியை சக காவலர்களின் உதவியோடு செய்துள்ளேன்.

எம்.கே.பி.நகர் காவல் நிலையத்திலிருந்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இங்கேயும் அந்தச் சேவையை செய்துவருகிறேன். கடந்த மாதம், மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துகிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் என்னிடம் தகவலைத் தெரிவித்ததும் ஆம்புலன்ஸுடன் அங்கு சென்றேன். அநாதையாக கிடந்த நபர் பிச்சைக்காரர்போல இருந்தார். அவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த நபரின் சடலத்துக்கு யாரும் உரிமைக் கோரவில்லை.

காவலர் சுரேஷ்
காவலர் சுரேஷ்

இதுபோல வானகரம் வேம்புலியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துகிடந்தார். அவரின் சடலத்தையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். அந்த முதியவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் இருவருக்கும் பெற்ற மகனைப்போல இறுதி அஞ்சலி செலுத்த முடிவு செய்தேன். இன்ஸ்பெக்டர் முதல் மதுரவாயல் காவல் நிலையத்தில் உள்ளவர்களின் பண உதவி மூலம் இருவரின் சடலத்தையும் மூலகொத்தளம் மயானத்துக்கு எடுத்துச் சென்றேன். ஆம்புலன்ஸ் டிரைவர், குழி தோண்டியவர்கள் 2 பேர், நான் என 4 பேரும் சேர்ந்து இருவரின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து தூக்கிச் சென்றோம்.

பூமாலை, பால், ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி அவர்களுக்குரிய இறுதி மரியாதையை செலுத்தி சடலங்களைப் புதைத்தேன். இதுவரை 11 பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளேன். அவர்கள் எல்லோரையும் என் அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனாகவே பார்க்கிறேன்" என்றார்.