Published:Updated:

`90% நோ அறிகுறி; 6 மண்டலங்கள்தான் டார்கெட்’ - சென்னையின் நிலையை விளக்கும் மாநகராட்சி ஆணையர் #Corona

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்

சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிப்பதே அதி வேக கொரோனா பரவலுக்குக் காரணமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இங்கு ஒரே நாளில் 104 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2162- ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1210- ஆகவும் உள்ளது.

சென்னை
சென்னை

தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் நேற்று மட்டும் சுமார் 94 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதே அதிவேக கொரோனா பரவலுக்குக் காரணம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஏன் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக தொடர்கிறது?

சென்னையின் கொரோனா நிலை, இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ஆணையர். அப்போது பேசிய அவர், ``சென்னையில் 6 மண்டலங்களில் அதாவது தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் இந்தப் பகுதிகளில் மட்டுமே அதிக வைரஸ் பாதிப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம், தி.ரு.வி.க ஆகிய 3 மண்டலங்களில் மட்டும் சுமார் 65% பாதிப்பு உள்ளது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அங்கு இருக்கும் 6 வார்டுகளில்தான் மிக அதிகமான தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு
தமிழக கொரோனா பாதிப்பு

கிராமப் பகுதிகளை விட சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிப்பதே வேகமான வைரஸ் பரவலுக்குக் காரணமாக உள்ளது. அதனால் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தி அங்கு மாநகராட்சியின் நடவடிக்கையை அதிகப்படுத்திக் கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர்.

``அருகில் வந்தால் கட்டிப்பிடிப்பேன்"-போலீஸை மிரட்டிய சென்னை ஜி ஹெச்-சிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி

இந்த 6 மண்டலங்களிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் இருந்த தெருக்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு இருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களான காய்கறி, மளிகை போன்றவற்றை அந்தத் தெருவுக்குள்ளேயே கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக இளம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த அத்தியாவசியப் பொருள்களின் விநியோகங்களைச் செய்வார்கள். அதேபோல் அந்தத் தெருக்களில் பல இடங்களில் சின்டெக்ஸ் டேங் வைத்து தண்ணீர் நிரப்பும் திட்டம் பற்றியும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்துடன் இணைந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூடுவது குறையும்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கிவருகிறோம். மேலும் சென்னையில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே வைரஸ் கண்டறியப்பட்டுக் கட்டுப்படுத்தலாம். 6 மண்டலங்களில் தான் அதிக கண்காணிப்புகள் இருக்கும். இந்தப் பொது நடவடிக்கைகள் போக 6 மண்டலங்களிலும் சமூக விலகல் கடைப்பிடிப்பது கடுமையாக்கப்படவுள்ளது. 100% சமூக விலகலைக் கடைப்பிடித்தால் வைரஸ் தாக்கத்தைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் கடைகள், சமூக விலகலைப் பின்பற்றாதவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு