Published:Updated:

`இப்படியொரு பாசமான கணவரைப் பார்ப்பது அரிது!' - இறப்பிலும் இணைபிரியாத சென்னைத் தம்பதி

லோகநாராயணன், ராஜேஸ்வரி
லோகநாராயணன், ராஜேஸ்வரி

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது. அடுத்தடுத்து இறந்த தம்பதி லோகநாராயணன், ராஜேஸ்வரிக்கு அவர்களின் மகன்கள் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு செய்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாராயணன் (65). இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ராஜேஸ்வரி (62). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. லோகநாராயணனும் ராஜேஸ்வரியும் தனியாக வசித்துவந்தனர். இந்நிலையில் இவர்களின் வீட்டின் கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர்.

representational image
representational image

அப்போது லோகநாராயணனும் அவரின் மனைவியும் படுத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, லோகநாராயணனின் மகன்களுக்கும் மகள்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இருவரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடந்தது.

இதுகுறித்து லோக நாராயணன் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், ``சென்னை மாநகராட்சியில் வரிவசூலிக்கும் ஊழியராக பணியாற்றிய லோகநாராயணன், மனைவி ராஜேஸ்வரி மீது அதிக பாசம் கொண்டவர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்கள். எங்கள் தெரு மக்களுக்கு முன்மாதிரியான தம்பதியாக இருவரும் வாழ்ந்தனர். மகன்கள், மகள்களுக்கு திருமணமாகியபிறகு அவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். லோக நாராயணனும் அவரின் மனைவி ராஜேஸ்வரியும் இந்த வீட்டில் குடியிருந்தனர். மகன்கள், மகள்கள் வீடுகளிலிருந்து சாப்பாடு வரும்.

'வீதி வரை அல்ல; கடைசி வரை மனைவி!’- சாவிலும் பிரியாத மதுரை தம்பதி!

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லோகநாராயணனின் மகன் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவரும் சென்னை திரும்பினார். லோகநாராயணனும் அவரின் மனைவியும் ஏனோ மகன்கள், மகள்கள் வீட்டில் தங்கியிருக்க விரும்பவில்லை. இந்தச் சமயத்தில் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து லோகநாராயணன் மனவேதனையடைந்து காணப்பட்டார்.

லோகநாராயணனுக்கும் ராஜேஸ்வரிக்கும் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆறுதல் கூறினர். சம்பவத்தன்று காலையில் கண்விழித்த லோகநாராயணன், வீட்டில் பால் காய்ச்சியுள்ளார். பின்னர், அவர் மனைவியை எழுப்பியபோது அவர் கண்விழிக்கவில்லை. மேலும், அவரின் உடலிலும் எந்தவித அசைவும் இல்லை. அதனால் லோகநாராயணன் அதிர்ச்சியில் உறைந்தார். மனைவி இறந்துவிட்டதை உணர்ந்த லோகநாராயணனின் உயிரும் அதே இடத்தில் பிரிந்துவிட்டது.

`50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி!' - இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி

கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின்பேரில் லோகநாராயணனின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தோம். கதவைத் திறந்து பார்த்தபோதுதான் இருவரும் இறந்து கிடந்தனர். ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு லோகநாராயணன்தான் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் இறந்துள்ளார். இருவரும் பாசமாக இருந்தார்கள். ஒற்றுமையாக வாழ்ந்த இந்தத் தம்பதி இறப்பிலும் பிரியவில்லை. கணவன் மனைவி என்றால் இந்தத் தம்பதி போல வாழ வேண்டும்" என்கின்றனர் கண்ணீர்மல்க

வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் லோகநாராயணன், ராஜேஸ்வரி மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல