Published:Updated:

பீலா ராஜேஷ் குறித்து அவதூறு..! - வழக்கில் சிக்கிய சென்னைத் தொழிலதிபர்

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா செய்தியாளர் சந்திப்பு குறித்து, ட்விட்டரில் வீடியோ பதிவுசெய்த மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்மீது சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ் குறித்து சுகாதாரத்துறை சார்பில் தினமும் செய்தியாளர்கள் சந்திப்பு தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீராம் , தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்த 2 வீடியோக்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி அரசின் நிர்வாகக் குளறுபடிகள் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறிய முரண்பட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பிரஸ் மீட்டில் கேள்வி எழுப்பிய நிருபர்.. மறுநாளே மாஸ்க் அணிந்துவந்த பீலா ராஜேஷ்!
பீலா ராஜேஷ் குறித்த ட்விட்டர் பதிவு
பீலா ராஜேஷ் குறித்த ட்விட்டர் பதிவு
நான் பதிவு செய்த வீடியோ, வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. அந்த வீடியோவில் உள்ள குரல், பீலா ராஜேஷ் உடையது. செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய தகவல் வீடியோவைத்தான் நான் பதிவு செய்திருந்தேன். தவறான தகவல்களை அவர் கூறியதைதான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
ஸ்ரீராம்

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், மயிலாப்பூர் தொழிலதிபருக்கு இணையதளம் மூலமாகவே சம்மனையும் அனுப்பியுள்ளனர். அதில், வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்குள் ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். அதில், அடையாளம் தெரியாத நபர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீஸார் நடத்திய விசாரணை அடிப்படையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பிய நபர், மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீராம் எனத் தெரியவந்துள்ளது. அவரின் ட்விட்டர் பதிவு மற்றும் வீடியோவை அழித்துவிடும்படி கூறியிருந்தோம். ஆனால், அவர் பதிவை டெலிட் செய்யவில்லை. அதனால் அவரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு
`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி

இதுகுறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீராம், 'மெட்ராஸ்' என்ற தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நான் பதிவு செய்த வீடியோ, வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. அந்த வீடியோவில் உள்ள குரல், பீலா ராஜேஷ் உடையது. செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய தகவல் வீடியோவைத்தான் நான் பதிவு செய்திருந்தேன். தவறான தகவல்களை அவர் கூறியதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன். அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மீதும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமரன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, மூன்றாவதாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு