Published:Updated:

`என் கணவரின் கடைசி ஆசையையாவது நிறைவேத்துங்க முதல்வரே..' -கொரோனாவால் இறந்த டாக்டரின் மனைவி கண்ணீர்

கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் குடும்பம்
கொரோனா தொற்றால் இறந்த டாக்டரின் குடும்பம்

'என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்க முதல்வர் அய்யா' என்று கொரோனா தொற்றால் இறந்த சென்னை டாக்டரின் மனைவி ஆனந்தி, கண்ணீர்மல்க பேசியுள்ளார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், சைமன் (55). கடந்த மாதம் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தபிறகு டாக்டர் சைமனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி, கடந்த 19-ம் தேதி இறந்தார். அவரின் சடலத்தை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டுசென்றபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இதுகுறித்து அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் நடந்த விசாரணையில், 21 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

`ஆம்புலன்ஸ் உடைப்பு; டிரைவருக்கு அடி' - கொரோனாவால் இறந்த சென்னை டாக்டரின் இறுதி அஞ்சலியில் வன்முறை
ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

டி.பி.சத்திரம் போலீஸார், டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 90 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொரோனா தொற்றால் இறந்த டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``மாண்புமிகு முதல்வருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். என் பெயர் ஆனந்தி சைமன். என் கணவர் டாக்டர் சைமன், 19-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அவங்களை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய ஃபாதர் அனுமதி கொடுத்தாங்க. ஒரு சில சம்பவத்தின் காரணமாக அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டார்.

புதைக்கப்படும்போதுகூட எங்க கண்களால் பார்க்க முடியல. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த என் கணவருக்கு வென்டிலேட்டர் பொருத்துவதற்கு முன்பு வீடியோ காலில் என்னிடமும் குழந்தைகளிடமும் பேசினாங்க. அதில், 'ஒரு வேளை நான் திரும்பி வரவில்லை என்றால், என்னை நம்ம மரபுப்படி அடக்கம் பண்ணிடுங்க' என்று சொன்னாங்க. மாண்புமிகு முதல்வர் நல்லமுறையில் செயல்படுகிறார். அதனால் குறைவான இறப்புகளைச் சந்திக்கிறோம்.

``சடலத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்தோம்!"- டாக்டர் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற நண்பர் கண்ணீர் #Corona
டாக்டரின் மனைவி ஆனந்தி
டாக்டரின் மனைவி ஆனந்தி

என் கணவரை சீல்டு செய்த சவப்பெட்டியில் புதைத்துள்ளனர். அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்தால், மக்களுக்கு எந்தவித தொற்றும் பரவாது. மாண்புமிகு முதல்வரிடம் பணிவாகக் கேட்கிறேன். என் 2 குழந்தைகளோடு விதவையாக நிற்கிறேன். கண்ணீரோடு முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்க அய்யா" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு